பெங்களூரு - மைசூரு விரைவு சாலையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்: 118 கி.மீ. தூரத்தை 75 நிமிடங்களில் அடையலாம்

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூரு – மைசூரு இடையேயான‌ 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கர்நாடகா மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இருந்து 145 கி.மீ. தொலைவில் உள்ள மைசூருவுக்கு சாலை மார்க்கமாக சென்றால் சுமார் 3 மணி நேரம் ஆகிறது. வார இறுதி நாட்கள், அலுவலக நேரங்களில் போக்குவரத்து நேரம் மேலும் அதிகரிப்பதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் பயண நேரத்தை குறைக்க, புதிய 10 வழி நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2018-ல் தொடங்கப்பட்டன.

பெங்களூரு – மைசூரு இடையே 118 கி.மீ. தூர 10 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க ரூ.8,480 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த சாலையின் அனைத்து பணிகளும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.

இதையடுத்து, மண்டியாவில் இன்று நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு – மைசூரு இடையேயான‌ 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த அதிவிரைவு நெடுஞ்சாலையில் பயணித்தால் 75 நிமிடங்களில் மைசூருவை அடையலாம்.

பெங்களூருவில் இருந்து குடகு, ஊட்டி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும் விரைவாக செல்ல முடியும்.

இந்த சாலை 11 மேம்பாலங்கள், 64 சுரங்கவழி பாதைகள், 5 புறவழிச்சாலைகள், 42 சிறிய பாலங்கள் ஆகியவற்றை இணைக்கிறது.

ஹுப்ளி - தார்வாட் இடையிலான சாலையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். மைசூரு - குஷால் நகர் இடையே ரூ.4,130 கோடி செலவில் 92 கி.மீ. நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகளையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார்.

கர்நாடகாவில் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே, புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE