டெல்லி சிறையில் சிசோடியாவுக்கு விவிவிஐபி அறை: துணை நிலை ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் புகார் கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைதானவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளார். இவர் முன்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அப்போது சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ டெல்லி அமைச்சர்களுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் டெல்லி புதியமதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இந்த வழக்கில் உண்மை வென்றுள்ளது. இப்போது சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்படுவார்’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் சுகேஷ் கூறியிருப்பதாவது: திஹார் சிறையில் மணிஷ் சிசோடியாவுக்கு விவிவிஐபி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் அவருக்கு சேவை செய்ய சேவகர்களும் அமர்த்தப்பட்டுள்ளனர். சிறையின் அறை மரத்தால் ஆன தரையைக் கொண்டிருந்தது. அவர் திஹார் சிறை எண்-1-ல் உள்ள 9-ம் எண் கொண்ட அறையில் இருந்தார். அந்த சிறைப் பிரிவில் 5 அறைகள் மட்டுமே இருந்தன. மேலும் அந்த சிறைப்பிரிவில் கைதிகள் நடந்து செல்ல பூங்கா, பேட்மிண்டன் மைதானம், உணவு சாப்பிடும் கூடம் ஆகியவை இருந்தன.

இந்த சிறையில் ஏற்கெனவே பல விவிஐபி-க்கள் இருந்துள்ளனர். சஹாரா நிறுவனர் சுப்ரதோ ராய், சுரேஷ் கல்மாடி, அமர் சிங், ஆ.ராசா, யுனிடெக் நிறுவனர் சஞ்சய் சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டபோது இந்த சிறைப்பிரிவில்தான் வைக்கப்பட்டு இருந்தனர். இதுதொடர்பாக துணை நிலை ஆளுநர் சக்சேனா நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் சிசோடியா தொடர்பாக ஆம் ஆத்மி பரப்பி வரும் பொய் கதைகளின் உண்மை நிலவரத்தை அறிந்து அதை வெளியுலகுக்கு ஆளுநர் கூறவேண்டும். இவ்வாறு கடிதத்தில் சுகேஷ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE