கைவினை கலைஞர்களுக்கு நிறுவன ஆதரவை PM-VIKAS திட்டம் வழங்குகிறது - பிரதமர் மோடி 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கைவினை கலைஞர்கள் எளிதாக கடன்வசதி பெறவும், உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக விற்கவும் தேவையான நிறுவன ஆதரவினை பிரதமரின் விஸ்வகர்மா கவுசால் சம்மான் திட்டம் வழங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலையரங்கில், இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது, "பகவான் விஸ்வகர்மா படைப்பாளராகவும், கட்டிடக் கலைஞராகவும் கருதப்படுபவர். கையில் பல்வேறு உபகரணங்களுடன் அவரது சிலை இருக்கும். உபகரணங்களின் உதவியுடன் கைகளால் பல்வேறு பொருள்களை உருவாக்கும் நீண்ட பாரம்பரியம் நம் சமூகத்தில் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். அவர்களை நாம் தனியாக விட்டுவிட முடியாது. பாரம்பரிய முறைப்படி கைவினைப் பொருட்களை உருவாக்கி, அந்த திறனை பாதுகாத்து தனித்துவமான ஒரு அடையாளத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். தற்சார்பு இந்தியாவின் உண்மையான உணர்வின் அடையாளங்கள் அவர்கள்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும்கூட கூட கைவினைஞர்களுகளுக்குத் தேவையான அரசின் உதவிகள் பெரும்பாலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக முறைசாரா தொழிலாளர்களான கைவினைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக கிடைத்த வேலையைச் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பலர் தங்களின் பாரம்பரிய தொழில்களை கைவிடும் நிலையில் உள்ளனர்.

பிரதமரின் விஸ்வகர்மா கவுசால் சம்மான் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, ஊடகங்களும் பொருளாதார வல்லுநர்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சிறு கைவினைஞர்களின் உள்ளூர் கைவினைப் பொருள்களின் உற்பத்தியை பாதுகாப்பதிலும், நாட்டின் வளர்ச்சியிலும் இந்த திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. விஸ்வகர்மா யோஜனா, கைவினை கலைஞர்களுக்கு எளிதாக கடன்வசதி கிடைக்க வழி செய்து, பொருள்களின் விற்பனையை ஊக்குவித்து அவர்களுக்கு நிறுவன ஆதரவினை வழங்குகிறது.

இன்றைய கைவினைக் கலைஞர்களை நாளைய தொழில்முனைவோர்களாக மாற்றுவதே நமது நோக்கம். இதற்கு அவர்களுக்கு ஒரு நிலையான வணிக மாதிரி தேவையாக இருக்கிறது. சிறு கைவினைக்கலைஞர்களும் மதிப்பு சங்கிலியில் ஒரு அங்கமாகும் வகையில் நாம் பணியாற்றவேண்டும்." இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கும் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைகள், கருத்துக்களைக் கேட்கும் விதமாக மத்திய அரசு, தொடர்ச்சியான பட்ஜெட்டுக்கு பிந்தைய வலையரங்குகளை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற அதன் 12 வது பகுதியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE