ஹோலி கொண்டாட்டம் -  டெல்லியில் ஒரே நாளில் ரூ.60 கோடிக்கு மது விற்பனை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லியில் ஹோலி பண்டிகை இந்த வருடம் அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் தாக்கம் மது விற்பனையில் தெரியவந்துள்ளது.

இங்கு மார்ச் 6-ல் மட்டும் ரூ.60 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. மொத்தம் சுமார் 26 லட்சம் மது பாட்டில்கள் டெல்லிவாசிகளால் வாங்கப்பட்டுள்ளது. இது டெல்லியில் ஹோலிக்கான மது விற்பனையில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

டெல்லியில் கடந்த பிப்ரவரியில் ரூ.238 கோடிக்கு மது விற்பனையானது. மார்ச்சில் இதை முறியடிக்கும் வகையில் ஹோலிக்கு முன் ஒரே நாளில் ரூ.60 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

டெல்லியில் மார்ச் 6-க்கு பிறகு கூடிய மது விற்பனையால் கடைகளில் பல முக்கிய மது வகைகள் தீர்ந்துவிட்டன. மார்ச் 8-ல் ஹோலி தினத்தில் அனைத்து கடைகளுக்கும் வழக்கம்போல் விடுமுறை விடப்பட்டது.

ஹோலி பண்டிகைக்காக பலரும் முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைக்கும் வழக்கம் உள்ளது. இந்தவகையில் மார்ச் 1-ல் ரூ.27.9 கோடி, 2-ல் ரூ.26.5 கோடி, 3-ல் ரூ.31.9 கோடி, 4-ல் ரூ.35.5 கோடி, 5-ம் தேதியில் ரூ.46.5 கோடி என மது விற்பனையாகியுள்ளது. இதையடுத்து புதுவருடம் உள்ளிட்ட எந்த நாட்களிலும் இல்லாத வகையில் மார்ச் 6-ல் அதிகரித்துள்ளது.

டெல்லியில் மது விற்பனை கடந்த வருடம் ரூ.6,100 கோடி என்றிருந்தது. கரோனா பரவலுக்கு பின் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE