விமானத்தில் புகைப்பிடித்த இளம்பெண் பெங்களூருவில் கைது

By இரா.வினோத்


பெங்களூரு: கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் புகைப்பிடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

கடந்த 6-ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. அந்த விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருந்த
நிலையில், விமானத்தின் கழிவறையில் இருந்து சிகரெட் புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் கதவை தட்டியபோது, உள்ளே இருந்த பிரியங்கா சக்ரவர்த்தி (24) கதவை திறந்தார். அப்போது குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் சிகரெட் கிடந்தது. விமான ஊழியர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அதை உடனே தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதையடுத்து விமான கேப்டன் அப்ஜித் அளித்த புகாரின்பேரில் பெங்களூரு கெம்பேகவுடா விமானநிலைய அதிகாரிகள் பிரியங்கா சக்ரவர்த்தியை கைது செய்தனர். விமானத்தில் புகைப்பிடித்தது, பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து, பெங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.

கொல்கத்தாவின் சீல்டா பகுதியை சேர்ந்த இப்பெண், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஷங்கர் மிஸ்ரா என்பவர் மது போதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE