கர்நாடக தேர்தலில் ஒவைசி கட்சி போட்டி - முஸ்லிம் வாக்குகள் சிதற வாய்ப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி தங்களது கட்சி, கர்நாடக பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத் தேர்தலில் எங்களது கட்சி 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. காங்கிரஸ்,பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடாமல், தனித்து போட்டியிடுகிறோம். முதல்கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன்.

அதன்படி பெலகாவி வடக்கு தொகுதியில் லதீப் கான் பதான், ஹூப்ளி தார்வாட் கிழக்கு தொகுதியில் துர்கப்பா பிஜ்வாட், பசவண்ணா பாகேவாடி தொகுதியில் அல்லாபக் ஷ் பிஜாப்பூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த மூன்று வேட்பாளர்களில் ஒருவர் இந்து மதத்தை சேர்ந்தவர். ஏஐஎம்ஐஎம் முஸ்லிம் கட்சி என சொல்லப்பட்டாலும், நாங்கள் இந்துக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருகிறோம். ஆனால் பாஜக முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை. இவ் வாறு ஒவைசி தெரிவித்தார்.

கர்நாடக பேரவைத் தேர்தலில் ஒவைசியின் கட்சி தனித்துப்போட்டியிடுவதால் முஸ்லிம்களின் வாக்குகள் சிதற வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு செல்லும் வாக்குகளின் சதவீதம் குறையும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஒவைசி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்து அக்கட்சியின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுகிறார்'' என கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE