பிரதமர் மோடியால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியா வசம் வந்துவிடும் - ஹரியாணா அமைச்சர் பேச்சு

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பிரதமர் மோடியால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) இந்தியா வசம் வந்துவிடும் என்று ஹரியாணா மாநில அமைச்சர் கமல் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹரியாணா மாநிலம் ரோஹ்டாக் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள். இதற்கான குரல்கள் அங்கு ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பிரதமர் மோடியின் நல்லாட்சி காரணமாக அடுத்த இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியா வசம் வந்துவிடும்.

2014-ம் ஆண்டுக்கு முன்னால் பாஜக வலுவான கட்சியாக இல்லை. ஆனால் இப்போது நிலைமை வேறாக உள்ளது. நாங்கள் வலுவான கட்சியாக வளர்ந்துவிட்டோம். நாடு முழுவதும் பாஜக மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

முந்தைய காலத்தில் மன்னர் பிருத்விராஜ் சவுகான், நாட்டிலுள்ள சில ஜெயச்சந்திரன்களால் தோற்கடிக்கப்பட்டார். அதேபோன்ற ஜெயச்சந்திரன்கள்தான் இப்போது, பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்டு வருகிறார்கள்.

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரையால் எந்தப் பலனும் இல்லை. நாட்டை துண்டாடியவர்கள்தான் இன்று நாட்டை ஒற்றுமைப்படுத்துவது குறித்து பேசி வருகின்றனர். உலகத்துக்கே குருவாக (விஷ்வகுரு) இந்தியாவை மாற்ற முடியும் என்றால் அது பாஜகவால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE