கடலில் கூடுகிறது இந்திய கடற்படைத் தளபதிகள் மாநாடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கடற்படைத் தளபதிகளின் மாநாடு, நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று தொடங்குகிறது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''2023-ம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. கடற்படைத் தளபதிகள் மட்டத்தில் ராணுவ-பாதுகாப்பு உத்தி போன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் புதுமையாக, கமாண்டர்கள் மாநாட்டின் முதல் கட்டம் கடலில், நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெறவுள்ளது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படைத் தளபதிகள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார். அடுத்தடுத்த நாட்களில் முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடனும், ராணுவம், விமானப்படை, கடற்படைத் தளபதிகளுடனும் ராஜ்நாத் சிங் கலந்துரையாட உள்ளார். அப்போது, முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சேவையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும்.

கடற்படைத் தலைமை தளபதி, மற்ற கடற்படைத் தளபதிகளுடன் இணைந்து கடந்த ஆறு மாதங்களில் இந்தியக் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய செயல்பாடுகள், உற்பத்தி செய்யப்பட்டத் தளவாடங்கள், மனிதவள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வதோடு, எதிர்காலத் திட்டங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆலோசிக்க உள்ளார். இந்த மாநாட்டின் போது, நவம்பர் 22-ம் தேதி இந்தியக் கடற்படையில் செயல்படுத்தப்பட்ட ‘அக்னிபாதை திட்டம்’ குறித்த தகவல் கடற்படைத் தளபதிகளுக்கு வழங்கப்படும்.

இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் நலன்களுக்கு ஏற்ப பல ஆண்டுகளாக கடற்படை அதன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியக் கடற்படையானது, போருக்குத் தயாரான, நம்பகமான, ஒருங்கிணைந்த படையாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது.'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE