‘நானோ’ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நானோ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், சாகுபடி நடைமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான ‘இப்கோ’ சார்பில் குஜராத்தின் காந்திநகர் மாவட்டம் கலோலில், நானோ யூரியா ஆலை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 45 கிலோ பாக்கெட் யூரியாவுக்கு பதிலாக 500 மி.லி. அளவில் திரவ யூரியா (நானோ யூரியா) தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் 8 சதவீதம் அளவுக்கு சாகுபடி அதிகரிக்கிறது. இதைத் தொடர்ந்து, கலோலில், நானோ டிஏபி உரம் தயாரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இப்கோ’ பொது மேலாளர் அஸ்வதி கூறியபோது, ‘‘50 கிலோ எடை கொண்ட டிஏபி உரத்தின் விலை ரூ.4,000. இது விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ.1,400-க்கு வழங்கப்படுகிறது. தற்போது கலோலில் ரூ.250 கோடி செலவில் நானோ டிஏபி உரம் தயாரிக்கும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. 500 மி.லி. நானோ டிஏபி உரம் விவசாயிகளுக்கு ரூ.600 விலையில் வழங்கப்படும்’’ என்றார்.

“நானோ யூரியாவை தொடர்ந்து, நானோ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தின் கீழ் நானோ டிஏபி உரம் தயாரிக்கப்படுகிறது. இனிமேல் விவசாயிகள் 50 கிலோ மூட்டை டிஏபி உரத்தை வாங்க தேவையில்லை. 500 மி.லி. பாட்டிலில் நானோ டிஏபி உரத்தை வாங்கிச் செல்லலாம்’’ என்று மத்திய உரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

‘‘நானோ யூரியாவை தொடர்ந்து இப்போது நானோ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு நமது விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்கும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE