மதுபான கொள்கை ஊழல் வழக்கு: மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை வரும் 6-ம் தேதி திங்கள்கிழமை வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பிப்.26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மறுநாள் திங்கள்கிழமை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிபிஐ கோரியபடி மணிஷ் சிசோடியாவை மார்ச் 4-ம் தேதி வரை, 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் இன்று சனிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் மூன்று நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம், சிசோடியாவுக்கு வரும் திங்கள்கிழமை வரை இரண்டு நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில், மதுபான கொள்கை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், இந்த வழக்கிற்கு தேவையான அனைத்து விஷயங்களும் விசாரிக்கப்பட்டு விட்டதால், என்னுயை காவலை நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. புதிய மதுபான கொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணிஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் பிப்.26ம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் மணிஷ் சிசோடியா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்ஹா அமர்வு மனுவினை விசாரணைக்கு எடுத்தது. சிசோடியா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது ‘‘நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மணிஷ் சிசோடியாவின் 5 நாள் காவல் முடிந்து இன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், அதிரடிப்படை போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE