மேகாலயா முதல்வராக மீண்டும் கான்ராட் சங்மா மார்ச் 7-ல் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

ஷில்லாங்: மேகாலயா முதல்வராக இரண்டாவது முறையாக என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

மேகாலயாவில் கடந்த 27-ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சோகியோங் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், என்பிபி கட்சி 26 தொகுதிகளில் வென்றது. கடந்த ஆட்சியில் என்பிபி கட்சியுடன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை தலா 5 தொகுதிகளிலும், பாஜக 2 இடங்களிலும் வென்றன. புதிதாக தொடங்கப்பட்ட விபிபி கட்சி 4 இடங்களிலும், எச்எஸ்பிடிபி மற்றும் மக்கள் ஜனநாயக முன்னணி ஆகியவை தலா 2 இடங்களிலும் வென்றுள்ளன. 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் வெற்றி பெற்றுள்ளனர். எந்தகட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா மீண்டும் ஆட்சிஅமைக்க ஆதரவு தருவதாக பாஜக கூறியுள்ளது.

இந்நிலையில், மேகாலயா ஆளுநர் பகு சவுகானை சந்திக்க முதல்வரும், என்பிபி கட்சிதலைவருமான கான்ராட் சங்மா நேற்று ராஜ்பவன் சென்றார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘எனக்கு32 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை உள்ளது. பாஜக தனது ஆதரவை ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. இன்னும் சிலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

பின்னர், ஆளுநர் பகு சவுகானை சந்தித்த கான்ராட் சங்மா, தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, மேகாலயாவில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அவர் உட்பட என்பிபிஎம்எல்ஏக்கள் 26 பேர், பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர், ஒரு சுயேச்சை என மொத்தம் 29 எம்எல்ஏக்கள் ராஜ்பவனில் இருந்தனர். அவரை ஆட்சி அமைக்குமாறுஆளுநர் பகு சவுகான் அழைப்பு விடுத்தார். இதையடுத்து மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா வரும் 7-ம் தேதிமீண்டும் 2-வது முறையாக பொறுப்பேற்கிறார். விழாவில் பிரதமர் மோடியும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE