“தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” - தமிழக போலீஸுடன் பேசிய பின் பிஹார் காவல் துறை அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

பாட்னா: தமிழகத்தில் பணிபுரிந்து வரும் பிஹார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி இருந்தது. இந்நிலையில், அது போலியானவை என தங்களிடம் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளதாக பிஹார் மாநில கூடுதல் காவல் துறை இயக்குநர் ஜே.எஸ்.கங்வார் தெரிவித்துள்ளார்.

வியாழன் அன்று தமிழகத்தில் பணிபுரியும் பிஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்டதாக ட்வீட் செய்திருந்தார் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், இது தொடர்பாக தமிழக தரப்பு அரசு அதிகாரிகளுடன் பேசி, தமிழகத்தில் வசிக்கும் பிஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலர் மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வியாழன் அன்றே தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வழியே விளக்கம் கொடுத்திருந்தார். அதில், தீங்கு விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு பகிரப்பட்ட போலியான வீடியோக்கள் அவை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், இது தொடர்பாக பிஹார் ஏடிஜிபி ஜே.எஸ்.கங்வார் கூறும்போது, “தனிப்பட்ட சம்பவத்தில் படம் பிடிக்கப்பட்ட வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் பிஹார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டுள்ளதாக சொல்லி பகிரப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு போலீசார், தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு சம்பவம் அங்கு நடக்கவில்லை என்றும் அவர்கள் தரப்பில் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர்கள் அனைவரும் அங்கு பாதுகாப்பாக உள்ளனர். எந்த பிரச்சினையும் அங்கு இல்லை. சம்மந்தப்பட்டவர்கள் உடன் தொடர்ந்து பிஹார் மாநில போலீசார் பேசி வருகின்றனர். அங்கு இதுபோன்ற தாக்குதல் சம்பவம் எதுவும் நடந்ததாக எங்கள் கவனத்திற்கு இதுவரை வரவில்லை. நாங்களும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், பிஹார் டிஜிபி, தமிழக டிஜிபி உடன் பேசியுள்ளார். அதேபோல இதர போலீஸ் உயர் அதிகாரிகள், தமிழக போலீஸ் அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE