புதுடெல்லி: பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.
மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர் அருண் கோயல். பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரியான இவர் கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி தானாக முன்வந்து ஓய்வு பெற்றார். ஆனால், மறுநாளே இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. அதன்பின் அருண்கோயல் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பார். மொத்தம் 5 ஆண்டுகளுக்கு மேல் இவர் தேர்தல் ஆணையத்தில் இருப்பார்.
தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் மின்னல் வேகத்தில் நடந்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுத் தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு கொலீஜியம் போன்ற அமைப்பு இருக்க வேண்டும் என அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹரிஷிகேஷ் ராய், சிடி ரவி குமார் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, ‘‘முன்னாள் அரசு அதிகாரி அருண் கோயலை 24 மணி நேரத்துக்குள் மின்னல் வேகத்தில் நியமனம் செய்தது ஏன்? இது எந்த மாதிரியான மதிப்பீடு? அருண் கோயல் நியமனம் தொடர்பான அசல் கோப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
» 3 மாநில தேர்தல் முடிவுகள் | திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி
» “மக்களின் ஆதரவோடு தனித்தே களமிறங்குவோம்” - மக்களவை தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி
அருண் கோயலின் தகுதி, நம்பகத்தன்மை குறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. நியமன நடைமுறை பற்றிதான் கேள்வி எழுப்புகிறோம். தேர்தல் ஆணையர் பதவிக்கு 4 பெயர்கள் அடங்கிய பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சர், பிரதமருக்கு பரிந்துரை செய்துள்ளார். இவர்களில் யாருமே 6 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய மாட்டார்கள்” என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கூறியது.
இதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, “அருண் கோயல் நியமன நடைமுறையை முழுவதுமாக பார்க்காமல் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கக் கூடாது. தேர்தல் ஆணைய சட்டத்தில், தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, இதில் எது முன்போ அதுவரை அவர்கள் பதவி வகிக்க முடியும் என உள்ளது. அருண் கோயல் நியமனம் சரியாக செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அருண் கோயல் நியமனம் தொடர்பான அசல் கோப்பை ஆய்வுசெய்த நீதிபதிகள் இதன் மீதான தீர்ப்பை கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது. இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ரஸ்தோகி, நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வின் ஒருமனதான முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனாலும், தனது காரணங்களுடன் அவர் தனிப்பட்ட தீர்ப்பையும் வழங்கினார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
சட்டம் இயற்றும்வரை..: பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்றால், தனிப் பெரும்பான்மையுள்ள எதிர்க்கட்சியின் தலைவர், இந்த குழுவில் இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை தொடரும்.
ஜனநாயகத்தில் தேர்தல் எந்தவித சந்தேகமும் இன்றி நியாயமாக நடைபெற வேண்டும். புனிதத்தன்மை காக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்.
அரசியல் சாசன அமைப்புக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் சட்டப்படி செயல்பட வேண்டும். நியாயமற்ற முறையில் செயல்பட முடியாது. நியாயமான தேர்தலை தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்ய முடியவில்லை என்றால், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் சட்ட விதிகளின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் சிதைந்து போகும். அரசியல் சாசனத்தின் 324-வது பிரிவில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனத்துக்கு சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த சட்டத்தையும் நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆணையத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் கருத்து: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனைப்படியே தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
துடிப்பான மக்களாட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது. தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில் சரியான நேரத்தில் தலையிட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையை பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. இ்வவாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago