இருசக்கர வாகனத்துக்கு பேன்சி எண் - ஏலத்தில் விளையாடிய 3 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

சிம்லா: இமாசல பிரதேசத்தில் போக்குவரத்து துறை சார்பில் பைக்கிற்கான பேன்சி பதிவு எண் ஏலத்தில் விடப்பட்டது. அந்த பதிவு எண்ணை, ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலம் கேட்டு விளையாட்டு காட்டிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தவிடப்பட்டுள்ளதாக அந்த மாநில துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறையும் அவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

இதுகுறித்து அக்னிஹோத்ரி மேலும் கூறியது: இருசக்கர வாகனத்துக்கு எச்பி 99-9999 என்ற பேன்சி பதிவு எண் போக்குவரத்து துறை வலைதளத்தில் பிப்ரவரி 16-ல் ஏலத்துக்கு வந்தது. இதற்கான அடிப்படை ஏலத்தொகை ரூ.1,000-ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஏலத்தில் பங்கேற்ற மூன்று பேர் பேன்சி நம்பரைப் பெறுவதற்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக தர தயாராக இருப்பதாக கூறி ஏல நடவடிக்கைகளில் விளையாட்டு காட்டியுள்ளனர்.

அவர்களின் விபரீத விளையாட்டால் அந்த ஏலம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்தவிதமான டெபாசிட் தொகையையும் செலுத்தவில்லை. இந்த நிலையில், அரசு ஏலத்துக்குள் புகுந்து அதனை கேலிக்கூத்தாக்கிய அந்த மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வையடுத்து, இனி ஏலத்தில் பங்கேற்பவர்கள் உரிய பணத்தை டெபாசிட் செய்ய தேவையான திருத்தங்கள் வலைதளத்தில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE