அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்: நிபுணர்கள் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதானி–ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நேற்று அமைத்தது. இந்தக் குழு 2 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதிகள் பி.எ.ஸ். நரசிம்ஹா, ஜே.பி. பர்திவாலா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படுகிறது. எஸ்பிஐ முன்னாள் தலைவர் ஓ.பி.பட், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.பி. தேவ்தர், வங்கித் துறை நிபுணர் கே.வி. காமத், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலகேனி, வழக்கறிஞர் சோமசேகரன் சுந்தரேஷன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக, பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணையையும் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி–ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. கடந்த மாதம் இந்த மனுக்களைவிசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று கூறியது.

இதையடுத்து நேற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்றுள்ள தொழிலதிபர் அதானி இவ்விகாரத்தில் விரைவில் முடிவு தெரியவரும் எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE