2,200 ஆண்டுகள் பழமையான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி முன்னிலையில், கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கருட சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. வேதபண்டிதர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்களுடன் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இரவு 7.30 மணியளவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து காணிக்கையாக வழங்கினார். அதன் பின்னர் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா ஆகியோர் தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.

பெரிய சேஷ வாகனத்தில் பவனி

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவரான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். சுவாமியை தரிசிக்க 4 மாட வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டவாறு வாகன சேவையை கண்டுகளித்தனர்.

வாகன சேவையின் முன்பு யானை, குதிரை, காளை போன்ற பரிவட்டங்கள் அணிவகுத்தன. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். வாகன சேவையின் முன்பு, பெரிய, சிறிய ஜீயர்கள் தலைமையில் வேத பண்டிதர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாடியவாறு சென்றனர். 2-ம் நாளான இன்று காலை சிறிய சேஷ வாகன சேவையும் இரவு அன்ன வாகன சேவையும் நடைபெற உள்ளது.

கோயில் வரலாறு

திருவேங்கடம் என்றழைக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுமார் 2,200 ஆண்டு கால வரலாறு உள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. நவாப்களின் காலத்திலும் அழிக்க இயலாத இக்கோயில் இப்போது உலக பிரசித்தி பெற்றுள்ளது.

வைணவமும், சைவமும் செழித்தோங்கும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியை பல்வேறு அரசர்கள், சக்கரவர்த்திகள், ஆற்காடு நவாப்கள், ஆங்கிலேயர்கள் என பலர் ஆட்சி செய்துள்ளனர். இஸ்லாமிய அரசர்களின் படையெடுப்பின்போதும் இந்தக் கோயிலை யாரும் நெருங்க இயலவில்லை.

கலியுக கடவுளாக போற்றப்படும் ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருப்பதி கோயில், கடல் மட்டத்திலிருந்து 2,799 அடி உயரத்தில் அமைந்துள்ளது. திருமலை நகரம் மட்டும் 26.75 கி.மீ பரப்பளவை கொண்டதாகும். சுயம்புவாக உருவான ஏழுமலையானுக்கு முதன்முதலில் தொண்டமான் சக்கரவர்த்தி தற்போதைய இடத்தில் ஆனந்த நிலையம் எனப்படும் கற்ப கோயிலை நிறுவியுள்ளார். இவர் ஆகாச ராஜனின் சகோதரர் ஆவார். ஆகாச ராஜனின் மகள்தான் பத்மாவதி தாயார் என புராணங்கள் கூறுகின்றன.

இக்கோயிலை பல்லவர்கள், சோழர்கள், பாண்டிய மன்னர்கள் நிர்வகித்துள்ளனர். 13-ம் நூற்றாண்டில் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் கோயிலுக்கு நன்கொடைகளை வழங்கி உள்ளார். இவரது காலத்தில் இக்கோயில் பெரும் வளர்ச்சி அடைந்தது. இங்குள்ள ஏழு மலைகளும் ஏழு தலைகொண்ட ஆதிசேஷனாக கருதப்படுகிறது. இதில் வெங்கடாத்திரி மலையில் சுவாமி குடிகொண்டுள்ளார்.

இக்கோயிலுக்கு சுமார் 2,200 ஆண்டு கால வரலாறு உண்டு. இதுதொடர்பான பல கல்வெட்டுகள் கோயில் வளாகங்களில் உள்ளன. தொல்காப்பியத்தில்கூட இக்கோயிலை வேங்கடம் என்றும் அதில் குடிகொண்டிருப்பவரை வேங்கடவன் என்றும் பாடப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள ‘சிலா தோரணம்’ என்ற இடத்தை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்குள்ள கற்கள் சுமார் 5 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என கூறியுள்ளனர். இதற்கான அறிவிப்புப் பலகையும் உள்ளது.

கடந்த 1944-ம் ஆண்டு வரை, அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு, மாமண்டூரில் உள்ள அன்னமய்யா பாதை உட்பட 4 வழிகள் மூலம் பக்தர்கள் திருமலைக்கு சென்றனர். இந்த வழிகளில் கொடிய மிருங்கள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை தாண்டி நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.

1944-ல் திருப்பதி அலிபிரி மலையடிவாரத்தில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இப்போது தினமும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர். பிரம்மோற்சவ காலத்தில் இது மேலும் அதிகரிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்