ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு: மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக இன்று பொதுத் தேர்தல்

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. அனைத்து தேர்தல் முடிவுகளும் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படுகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராகாலமானதை அடுத்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று (பிப்.27) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.11 லட்சம் ஆண்கள், 1.16 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 1,206 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 விவிபாட்இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்)அனைத்தும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. ஜிபிஆர்எஸ் கருவிபொருத்தப்பட்ட 20 சரக்கு வாகனங்களில், 20 மண்டல அலுவலர்களின் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இவை அனைத்தும் அனுப்பப்பட்டன.

இப்பணியை தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது:

தேர்தல் விதிமீறல் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 796 புகார்கள் பெறப்பட்டுள்ளன. விதிமீறல் புகார் குறித்து 10 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் உள்ள தகுதியான வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்க முடியும்.

27-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குச்சாவடிகளில் இருந்து போலீஸ்பாதுகாப்புடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும்மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு (ஐஆர்டிடி)எடுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேகாலயா, நாகாலாந்து தேர்தல்

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

குறிப்பாக, மாநில போலீஸாருடன் மத்திய ஆயுதப்படை போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டுமே மலைகள் நிறைந்த மாநிலம் என்பதால், தொலைதூரப் பகுதிகளில் உள்ளவாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள் சாகசபயணம்போல சென்றுள்ளனர். சிலர் மலைப்பகுதிகளில் நடைபயணமாகவும், சிலர் கயிற்றுபாலம் மூலமாகவும், ஆறுகளை கடந்தும், படகு மூலமாகவும் சென்றுள்ளனர்.

மலைப்பாங்கான பகுதி என்பதால் மேகாலயாவில் 974 வாக்குப்பதிவு மையங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் 25-ம் தேதியே தங்கள் பயணத்தை தொடங்கிவிட்டனர் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி கர்கோங்கர் தெரிவித்துள்ளார்.

மேகாலயாவில் மொத்தம் உள்ள60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்துதொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி)57, திரிணமூல் காங்கிரஸ் 56 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அங்கு 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேகாலயாவில் மொத்தம் உள்ள 3,419 வாக்குப் பதிவு மையங்களில்640 பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜக ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதுபோல காங்கிரஸ் 23, நாகா மக்கள்முன்னணி 22, ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அங்கு 13.17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இதற்கிடையே, திரிபுராவில் கடந்த 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

மேற்கண்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு என அனைத்து தேர்தல்களிலும் பதிவாகும்வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்