"ஒருவேளை இந்திய ஒற்றுமை யாத்திரையின் வெற்றி சோனியா காந்திக்கு ஒரு புதிய நம்பிக்கையை பாய்ச்சி இருக்கலாம். ஆனால், அவரில்லாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்னவாகும்?"
இந்திரா காந்தியின் மருமகள், ராஜீவ் காந்தியின் மனைவி, ராகுல், பிரியங்காவின் தாயார் இவையெல்லாம் தாண்டி நீண்ட காலமாக காங்கிரஸ் எனும் ஒரு பேரியக்கத்தின் தலைவராக இருந்தவர் என்றெல்லாம் அறியப்படும் சோனியா காந்தி தனது தீவிர அரசியல் வாழ்விற்கு விடை கொடுக்கப்போவதாக இன்றைய அவருடைய பேச்சை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாத, விவாதங்கள் எழுந்துள்ளன.
2014 மே வரை காங்கிரஸ் தொடர்ந்து மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ரிமோட் கன்ட்ரோல் பிரதமர், பப்பட் பிரதமர், ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் என்ற விமர்சனத்தை மன்மோகன் சிங் அதிகமாக சந்திக்க நேர்ந்தது. காரணம், அவர் எல்லா முடிவுகளையும் சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படியே எடுக்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனமே. 2014-ல் மத்தியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு காந்தி குடும்பத்தைச் சாராத காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுள்ளார்.
கார்கே "இன்று ஒரு ஒரு காங்கிரஸ் தொண்டர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தனது முதல் உரையில் கூறியிருந்தாலும், அவர் காந்தி குடும்பத்தின் விசுவாசி என்றுதான் எல்லோரும் அறிகின்றனர்.
» நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் கைப்பற்றிவிட்டன: சோனியா காந்தி
» “2024 தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி” - மல்லிகார்ஜுன கார்கே
“கடினமான காலங்களில் காங்கிரஸை வழிநடத்தியதற்காக சோனியா காந்திக்கு நன்றி. அவரது தலைமையில், இரண்டு யுபிஏ அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முதன்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதுபோல விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இந்திய நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் அவலத்தைப் புரிந்து கொள்வதற்காக பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு எனது பாராட்டுகள். காங்கிரஸை முன்னோக்கி கொண்டு செல்ல கட்சியின் உதய்ப்பூர் சிந்தனை திட்டத்தை செயல்படுத்துவது எங்கள் பொறுப்பு" என்பதும் அன்றைய தினம் கார்கே பேசியதுதான்.
அதனால் தான் ரிமோட் கன்ட்ரோல் தலைவர் கார்கே போன்ற விமர்சனங்களுக்கு 2024 தேர்தலுக்கு முன்னர் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நகர்வாகக் கூட இருக்கலாம் சோனியா காந்தியின் இன்றைய பேச்சு. கார்கே தலைவரானதும் சோனியா அளித்தப் பேட்டியில், "இதற்காகக்த்தான் நான் நீண்ட காலமாக காத்திருந்தேன்" என்று கூறியிருந்தார். அப்போதும் கூட சோனியா ஓய்வை சூசகமாக குறிப்பிடுகிறார் என்று பேசப்பட்டது. ஷிம்லாவில் தனது ஓய்வுக் காலத்திற்காக ஒரு காட்டேஜ் கட்டியுள்ளார் சோனியா காந்தி. விரைவில் அவர் அங்கு செல்வார் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில்தான் இன்று (பிப்.25) சோனியா இன்னிங்ஸ் முடிவு பற்றி பேசியுள்ளார்.
சத்தீஸ்கரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சோனியாவின் இன்றைய பேச்சு: “இப்போது மத்தியில் உள்ள ஆட்சி எதிர்க்கட்சிகளின் குரலை இரக்கமின்றி ஒடுக்குகிறது. இந்திய மக்களுக்குள் அச்சத்தையும், வெறுப்பையும் மூட்டி அதில் எண்ணெய் ஊற்றி வளர்க்கிறது. சிறுபான்மையினரைக் குறிவைக்கிறது. பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் என நலிந்தோர் மீதான குற்றங்கள், பாகுபாடுகள் மீது பாராமுகம் கொண்டுள்ளது. தனது வார்த்தைகளாலும் செயல்களாலும் மகாத்மா காந்தியை நகைக்கிறது. நமது மதிப்பீடுகள், அரசியல் சாசனத்தை அவமதிக்கிறது. நாட்டில் ஒருசில தொழிலதிபர்களை வளர்த்தெடுக்க தேசப் பொருளாதாரத்தை சிதைத்துள்ளது.
இது காங்கிரஸ் கட்சிக்கும், தேசத்துக்கும் ஒரு சவாலான காலம். பாஜகவும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் நாட்டின் ஒரே ஒரு அமைப்பைக்கூட விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் கைப்பற்றிவிட்டது. 2004, 2009 மக்களவைத் தேர்தல்களில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் நாங்கள் பெற்ற வெற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு தன்னிறைவைத் தந்தது. இப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிவு பெறுகிறது என்பதில் எனக்கு இன்னமும் திருப்தியே.
இந்திய ஒற்றுமை யாத்திரை நமது பழம்பெரும் கட்சிக்கும், மக்களுக்கும் இடையேயான பந்தத்தை மீட்டெடுத்துள்ளது. காங்கிரஸ் எப்போதும் மக்கள் பக்கமே நிற்கும், மக்களுக்காகவே போராடும் என்பதை இந்த யாத்திரை நிரூபித்துள்ளது. இந்த யாத்திரைக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். குறிப்பாக ராகுல் காந்தி. அவருடைய உறுதியும், தலைமையும்தான் இந்த யாத்திரையை வெற்றியடையச் செய்துள்ளது.
ஒரு கடினமான போராட்டத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம். இந்த முக்கியமான தருணத்தில் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் கட்சியையும், நாட்டையும் காக்கும் சிறப்பு பொறுப்பைக் கொண்டுள்ளீர்கள். காங்கிரஸ் என்பது வெறும் கட்சியல்ல. இந்தியா தனது சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும், சமநீதிக்கும் போராடிய வாகனமாக காங்கிரஸ் இருந்துள்ளது. நம் முன் இப்போது இருக்கும் பாதை எளிதானது அல்ல. ஆனால் எனது அனுபவமானது வெற்றி நமக்கே என்று உணர்த்துகிறது” என்றார் சோனியா காந்தி
இன்னிங்க்ஸ் முடிவு உணர்த்துவது என்ன? - காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாட்டில் சோனியா தனது பேச்சில் இன்னிங்ஸின் முடிவு என்று குறிப்பிட்டிருப்பது அவர் தேர்தல் அரசியல் உள்பட தீவிர அரசியலுக்கே முற்றுப்புள்ளி வைக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில், அடுத்துவரும் 2024 தேர்தலில் அவர் ரே பரேலியில் இருந்து போட்டியிடுவாரா என்று எதுவும் குறிப்பிட்டுத் தெரிவிக்கவில்லை. இன்னிங்ஸ் முடிவு என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான முடிவு என்று எடுத்துக் கொண்டால் அடுத்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடலாம். இல்லாவிட்டால் ரே பரேலியில் பிரியங்கா காந்தி சோனியாவுக்கு பதில் போட்டியிடலாம். 2019-ல் அமேதியில் படுதோல்வி அடைந்த ராகுல் கூட மீண்டும் அங்கு போட்டியிடலாம்.
ஒரு இன்னிங்க்ஸ் முடிந்தால் இன்னொரு இன்னிங்ஸ் கூட தொடங்கலாம் அல்லவா? காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை சோனியா துறந்திருந்தாலும்கூட இன்னும் அவர் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருக்கிறார். பாஜகவை, மோடியை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும் என்று ராகுல் காந்தியே ஓர் அண்மைப் பேட்டியில் கூறியுள்ளார். அப்படியிருக்க சோனியா முழுமையாக ஒதுங்கிவிட்டால் 2024 தேர்தலில் அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் கேள்விக்குறியே.
ஒருவேளை இந்திய ஒற்றுமை யாத்திரையின் வெற்றி சோனியா காந்திக்கு ஒரு புதிய நம்பிக்கையை பாய்ச்சி இருக்கலாம். ஆனால், அவரில்லாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்னவாகும்?
ஆகையால், சோனியாவின் அறிவிப்பை முழுமையான ஓய்வாக பாவிப்பதற்கு முன்னர் இன்னும் சில காலம் நாம் பொறுத்திருக்க வேண்டும்தான்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago