“2024 தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி” - மல்லிகார்ஜுன கார்கே

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், ''கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி சிறந்த தலைமையை வழங்கியது. தீர்க்கமான தலைமைக்கான ஒரே மாற்றாக அது மட்டுமே இருக்க முடியும். அப்போது இருந்ததுபோல், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் விரும்புகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாநாட்டை தடுத்து நிறுத்த பாஜக முடிந்தமட்டும் முயன்றது. சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையைக் கொண்டு சோதனை நடத்தியது. கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் மூத்த தலைவர் பவன் கேராவை கைது செய்தது. எனினும், இதையெல்லாம் முறியடித்து இந்தக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது'' எனத் தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் மாநாட்டுக்கு வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, பிரியங்கா காந்திக்கு ரோஜா பூக்களைத் தூவியும் வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்த வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் வழிகாட்டும் குழுவில் உள்ள உறுப்பினர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு பிரிவினர் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் தேர்தல் நடத்த வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், இறுதியாக தேர்தல் நடத்த வேண்டாம் என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி கட்சியின் 25 செயற்குழு உறுப்பினர்களில் 12 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்; மற்றவர்களை கட்சித் தலைவர் நியமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE