செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க கார்கேவுக்கு அதிகாரம் - காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு ஒருமனதாக முடிவு

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்க, காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

நாட்டில் நிலவும் அரசியல் சூழல், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, வேளாண்மை, வேலைவாய்ப்பின்மை, சமூக நீதி உட்படபலவிஷயங்கள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் 15,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுவில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை மனம்திறந்து தெரிவிக்க வேண்டும் எனவும், அவர்களது முடிவுதான் தனது முடிவுஎனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழு தேர்தல் குறித்து கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆலோசனை நடத்தியது. முக்கிய முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் செயற் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அதிகாரம் வழங்க வழிகாட்டுதல் குழுவில் உள்ள 45 உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவு செய்தனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் செயற் குழு தேர்தல்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். 25 உறுப்பினர்கள் அடங்கிய காங்கிரஸ் செயற் குழுவில் 12 பேர் தேர்தல் மூலமும், 11 பேர் நியமனம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். காங்கிரஸ் செயற்குழுவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் எனவும் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

சிறப்பு வாய்ந்த மாநாடு: கார்கே கூறுகையில், ‘‘ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியல்சாசனத்துக்கு அச்சுறுத்தல் அல்லது நெருக்கடி ஏற்படும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடுநடத்தப்படுகிறது. இதில் அரசியல் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. காங்கிரஸ் தலைவராக மகாத்மா காந்தி தேர்வு செய்யப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியுள்ளதால் தற்போது நடைபெறும் 85வது மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ராகுல் மேற்கொண்ட தேசிய ஒற்றுமை யாத்திரை பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த யாத்திரை ஏற்படுத்திய ஊக்கத்தை கட்சி தொண்டர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் 32 விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. கூட்டணி அரசியல், காங்கிரஸ்தலைமையிலான கூட்டணி, புதிய பொருளாதார தொலைநோக்கு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE