தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற ஆம் ஆத்மி 4 மாநிலங்களில் போட்டி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இந்த வருடம் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது. இதனால் இந்த 9 மாநிலங்களில் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி, அருகிலுள்ள பஞ்சாபிலும் போட்டியிட்டு அம்மாநிலத்தை கைப்பற்றியது. கோவா மற்றும் குஜராத்திலும் போட்டியிட்ட இக்கட்சி அங்கு கணிசமான வாக்குகளை பெற்றது.

எனவே இந்த 4 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியானது.இந்த வருடம் மேலும் 4 மாநிலங்களின் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கேஜ்ரிவால் மார்ச் 4-ல் கர்நாடகா, மறுநாள் சத்தீஸ்கர், மார்ச் 13-ல் ராஜஸ்தான் மற்றும் அதற்கு மறுநாளில் மத்திய பிரதேசம் என தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்.

ஒரு கட்சி, மாநில கட்சிக்கான அந்தஸ்து பெற அம்மாநிலத்தில் அதன் தொகுதிகளில் 3 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அல்லது 6 சதவீத வாக்குகள் மற்றும் 2 தொகுதிகள் பெற்றாலும் மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

2 மாநிலங்களில் ஆட்சி: இந்நிலையில் இரண்டு மாநிலங் களில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி, குஜராத் தேர்தலில் 12.92 சதவீத வாக்குகள் பெற்றது. இதுபோல் கோவாவிலும் அக்கட்சிக்கு கிடைத்த மாநில அந்தஸ்தால் அது, தேசிய கட்சியாகி விட்டது.

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் முதன்முறையாக 2013-ல் ஆட்சி அமைத்த பிறகு, 2014 மக்களவை தேர்தலில் தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் போட்டியிட்டது. இதில் படுதோல்வி கிடைக்கவே, பின்வாங்கிய அக்கட்சி தற்போது படிப்படியாக போட்டியிட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE