காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க கார்கேவுக்கு அதிகாரம்

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிகாரம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எனினும், இன்றைய மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை. அவர்கள் இன்றைய மாநாட்டை தவிர்த்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாநாட்டில் அவர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் முதல் நாளான இன்று காங்கிரஸ் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கட்சியின் வழிகாட்டும் குழு ஆலோசனை நடத்தியது. சுமார் இரண்டரை மணி நேரம் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் காங்கிரஸ் செயற்குழுவுக்குத் தேர்தல் நடத்துவதில்லை என்றும், செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்குவது என்றும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதனைத் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் செயற்குழுவில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி, சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப கட்சியின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். இது குறித்து காந்தி குடும்பத்துடன் ஆலோசிக்கப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ராம் ரமேஷ், காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தப்படவில்லை என்றும், தற்போதுள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE