டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் அதற்கு சில மணித்துளிகள் முன்னதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் பவன் ஷெராவத் பாஜகவில் இணைந்தார். இதனால் டெல்லி மாநகராட்சியில் இன்று புதிதாக மற்றுமொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று (பிப்.24), டெல்லி மாநகராட்சியின் மாமன்றத்தில் புதிய மேயர் ஷெல்லி ஓபராய் தலைமையில் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு உள்ளதாகவே ஒத்திவைக்கப்பட்டது. புதிய மேயர் ஷெல்லி ஓபராய், பாஜக கவுன்சிலர்கள் வாக்குப் பெட்டியை தூக்கி எறிந்தும், வாக்குச் சீட்டுகளை கிழித்தெறிந்தும் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறினார்.

பாஜக கவுன்சிலர் ஷிகா ராய் கூறும்போது, "நாங்கள் தேர்தலை மீண்டும் புதிதாக நடத்துமாறு வேண்டுகிறோம். உறுப்பினர்கள் மொபைல் போன்களை பூத் வரை கொண்டுவர மேயர் எப்படி அனுமதித்தார் என்றே நாங்கள் போராடினோம். எங்கள் எதிர்ப்புக் குரலைத் தொடர்ந்தே அவர் மொபைல் கொண்டுவரக் கூடாது என எச்சரித்தார். அந்த எச்சரிக்கைக்குப் பின்னர் நாங்கள் தேர்தலை புதிதாக நடத்துமாறு வலியுறுத்தினோம். அவர் பிடிவாதமாக இருந்தார் " என்றார்.

இந்நிலையில் இன்று நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் புதிதாக நடைபெறவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார். இந்தத் தேர்தலில் 6 உறுப்பினர்கள் பதவிக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE