தீர்ப்பை இணையத்தில் அறிய தனித்துவ எண்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இணையத்தில் தீர்ப்பு விவரங்களை எளிதாக தேடி கண்டுபிடிக்க ஒவ்வொரு தீர்ப்புக்கும் தனித்துவ எண் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தினசரி பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தீர்ப்புகள் நீதிபதிகள் கையெழுத்திட்ட உடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வழக்குஎண், நீதிபதியின் பெயர், தீர்ப்பு வெளியான நாள், வாதி, பிரதிவாதியின் பெயர் ஆகியவற்றை இணையத்தில் பதிவிட்டு குறிப்பிட்ட தீர்ப்பு விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த சூழலில் இணையத்தில் தீர்ப்பை எளிதாக அறிய கூடுதலாக ஒரு வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளுக்கும் தனித்துவ எண் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல்கடந்த ஜனவரி 1-ம் தேதி வரையிலான தீர்ப்புகளுக்கு தனித்துவ எண் வழங்கப்பட உள்ளது. இதன்படி30,000 தீர்ப்புகளுக்கு பிரத்யேக எண் அளிக்கப்படும்.

இரண்டாம் கட்டமாக 1995-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வரையிலான தீர்ப்புகளுக்கும் மூன்றாம் கட்டமாக 1950-ம் ஆண்டுமுதல் 1994-ம் ஆண்டு வரையிலான தீர்ப்புகளுக்கும் தனித்துவ எண்கள் வழங்கப்படும். பிராந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தீர்ப்புகளை சரிபார்க்க நீதிபதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE