“2024-ல் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையாவிட்டால்...” - கார்கே பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “வரும் 2024-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். இல்லாவிட்டால், நாட்டில் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்விடும்” என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நாகாலாந்தில் வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ''நாட்டை என்னால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்; எவர் ஒருவரும் என்னைத் தொட முடியாது என்றெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். ஜனநாயகத்தை மதிக்கும் யாரும் இப்படி பேச மாட்டார்கள். நீங்கள் சர்வ அதிகாரமும் கொண்டவர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

வரும் 2024-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். இல்லாவிட்டால், நாட்டில் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்விடும். எனவேதான், நாங்கள் ஒவ்வொரு கட்சியிடமும் பேசி வருகிறோம். எங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறோம். பாஜக பெரும்பான்மை பெற்றுவிடக் கூடாது. மற்ற கட்சிகள் அனைத்தும் இணைந்து பெரும்பான்மையைப் பெற வேண்டும். 100 மோடிகள் அல்லது அமித் ஷாக்கள் வந்தாலும் வரட்டும்.

சுதந்திரத்திற்காக வாழ்வை தியாகம் செய்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்; பாஜகவினர் அல்ல. சுதந்திரத்திற்காக பாஜக தலைவர்கள் யாரும் தூக்கில் தொங்கவில்லை; சிறைக்குச் செல்லவில்லை. மாறாக சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை கொன்றார்கள். அப்படிப்பட்டவர்கள் நாட்டுப்பற்று குறித்து பேசலாமா?

நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி தனது வாழ்வை கொடுத்தார். நாட்டின் ஒற்றுமைக்காக ராஜிவ் காந்தி தன் உயிரை தந்தார். 2014-ல்தான் நாடு சுதந்திரம் பெற்றதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கார்கே பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE