ஹிஜாப் விவகாரம் | கர்நாடக மாணவிகள் மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடகாவில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதிக்க கோரி முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மனுவினை பட்டியலிடுவது குறித்து பரிசீலனை செய்வதகாக தலைமை நீதிபதி சந்திரசூட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும் என்று முஸ்லிம் மாணவிகளில் சிலர் இன்று (புதன்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மாணவிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷதன் ஃபராசத், "மாணவிகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் அவர், "ஏற்கனவே அவர்களுக்கு ஒருவருடம் வீணாகிவிட்டது. தற்போது அவர்கள் தனியார் கல்லூரி மாணவர்களாக இருந்தபோதிலும் தேர்வுகள் அரசு கல்வி நிறுவனங்களில் தான் நடைபெறுகிறது. அதனால் அவர்களை தேர்வில் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போது, "அவர்கள் ஏன் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை" என்று தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர்,"அவர்கள் தலையில் ஹிஜாப் அணிந்திருந்தனர்" என்றார்.

கடந்த ஜனவரி இறுதியில், அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதி பெற்றுத் தருமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில மாணவிகள் சிலர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது "இந்த மனுவை பரிசீலித்து நான் விசாரணைக்கான தேதியை ஒதுக்குகிறேன். இது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் தன்மை கொண்டது. நீங்கள் பதிவாளரிடம் இதுபற்றி முறையிடுங்கள்" என்று தெரிவித்திருந்தார். அப்போது பிப்.6 ஆம் தேதி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்க இருந்தது.

மாறுபட்ட தீர்ப்பு: முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், மற்றொரு நீதிபதி சுஷந்த் துலியா கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.

"வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதை தடை செய்வதால் தனிநபர் சுதந்திரமோ இஸ்லாமிய மாணவிகளின் உரிமையோ பறிபோகாது" என்று நீதிபதி ஹேமந்த் குப்தா கூறினார்.

அதேவேளையில், நீதிபதி சுஷாந்த் துலியா கூறும்போது, "ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறையா இல்லையா என்று கர்நாடக உயர் நீதிமன்றம் முடிவு செய்ததே தவறு” என்றார். உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிஜோ இமானுவேல் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிபதி துலியா, “ஒரு பழக்கம் நடைமுறையில் உள்ளதா அது நிறுவப்பட்டதா, அது அங்கீகரிக்கப்பட்டதா என்பதை மட்டுமே நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அந்த வகையில் ஹிஜாப் அணிதல் என்பது இந்த மூன்று புள்ளிகளையும் உள்ளடக்கியுள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE