துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டு - இந்தியா மீதான நன்மதிப்பு அதிகரிக்கிறது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நன்மதிப்பு அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.

கடந்த 6-ம் தேதி துருக்கி, சிரியாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இருநாடுகளிலும் இதுவரை 48,000 பேர் உயிரிழந்துள்ளனர். 1.22 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து தேசியபேரிடர் மீட்புப் படை வீரர்கள்,ராணுவ மருத்துவக் குழுக்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த குழுக்கள் ‘ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் துருக்கியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீ்ட்புப் பணிகளை மேற்கொண்டன.

இதேபோல சிரியாவுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் என ஏராளமான நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஐ.நா.சபை சார்பில் சிரியாவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அமைதிப்படையில் இந்திய வீரர்கள் பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ளனர்.

உலகம் ஒரு குடும்பம்

துருக்கியில் பணியாற்றிய இந்திய குழுக்கள் கடந்த சில நாட்களில் பகுதி, பகுதியாக டெல்லி திரும்பின. துருக்கி பூகம்ப பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்ட குழுவினரை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

உலகம் ஒரு குடும்பம் என்றகொள்கையை நாம் பின்பற்றுகிறோம். அந்த வகையில் துருக்கி,சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களை நமது சொந்தமாகக் கருதி சேவை செய்தோம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய குழுக்கள் விரைந்து சென்றன. இது ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த 2001-ம் ஆண்டு பூகம்பத்தால் குஜராத்தில் நேரிட்ட பாதிப்புகளைவிட துருக்கி, சிரியாவில் பல மடங்கு பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. இது நூற்றாண்டின் மிகப்பெரிய பூகம்பமாகக் கருதப்படுகிறது. குஜராத் பூகம்ப மீட்புப் பணிகளில் நான் நேரடியாக ஈடுபட்டேன். அப்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறிவது, உணவு, மருந்துகள், மருத்துவ சிகிச்சை பல பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

கடந்த 1979-ம் ஆண்டில் குஜராத்தின் மோர்பியில் அணை உடைந்தபோது அந்த நகரம் முழுவதும் நாசமானது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அப்போது நான் தன்னார்வலராக பல மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். மீட்புப் பணிகளில் நீங்கள் எவ்வளவு சிரமங்களை சந்தித்து இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

தேசிய கொடியின் வலிமை

பிறரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நபர் தன்னலமற்றவர் என்று பாராட்டப்படுகிறார். இதேபோல தன்னிறைவு பெற்ற, தன்னலமில்லாத இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவுகிறது.

உக்ரைனில் போர் மூண்டபோது அங்கு தவித்த இந்தியர்களையும் நட்பு நாடுகளை சேர்ந்தவர்களையும் பத்திரமாக மீட்டோம். அப்போது உக்ரைனில் இந்திய தேசியக் கொடியின் வலிமையைப் பார்த்து உலகம் வியந்தது. இப்போது துருக்கி, சிரியாவில் இந்திய தேசியக் கொடியைப் பார்த்து அந்த நாடுகளின் மக்கள் நன்றியுடன் மரியாதை செலுத்தியதை கண்கூடாகப் பார்த்தோம்.

சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நன்மதிப்பு அதிகரித்து வருகிறது. உலகில் எந்தப் பகுதியில் பேரிடர் ஏற்பட்டாலும் முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா இருக்கிறது. நேபாள நிலநடுக்கம், மாலத்தீவு நெருக்கடி, இலங்கையில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட இக்கட்டான நேரங்களில் அந்த நாடுகளுக்கு இந்தியா உதவியது.

பேரிடர் காலங்களில் நமது மீட்புதிறனை மேலும் அதிகரிக்க வேண்டும். உலகின் மிகச் சிறந்த மீட்புப் படையை கொண்ட நாடு என்ற அடையாளத்தை இந்தியா பெற வேண்டும். துருக்கி, சிரியாவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்களால் நமது நாட்டின் கவுரவம் உயர்ந்துள்ளது. அனைவரையும் மனதார பாராட்டுகிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE