நிபந்தனைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக சந்திரபாபு நாயுடு உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு

By என். மகேஷ்குமார்

காக்கிநாடா: ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், இப்போதிலிருந்தே ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஆதரவு திரட்டத் தொடங்கி விட்டனர். எதிர்க்கட்சியில் உள்ள தெலுங்கு தேசம் அணியினர் பாதயாத்திரை தொடங்கியுள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் சித்தூர் முதல் ஸ்ரீகாகுளம் வரை 4000 கி.மீ தூரத்திற்குமாநிலம் முழுவதும் பாதயாத்திரை தொடங்கி உள்ளார். ஆனால், பாதயாத்திரை செய்யக் கூடாது என தீர்மானித்த ஆந்திர அரசு, அதனை எவ்வாறாவது தடுக்க வேண்டுமென நினைத்து, திடீரென ஊர்வலங்கள், பாதயாத்திரை நடத்த தடை விதித்து அரசாணை கொண்டுவந்தது. இதனால், லோகேஷ் பாதயாத்திரையை மிகவும் கஷ்டப்பட்டு நடத்தி வருகிறார். நீதிமன்றம் அனுமதி அளித்தும், போலீஸார் ஆங்காங்கே லோகேஷை தடுத்து நிறுத்தியும், பிரச்சார வேனை பறிமுதல் செய்தும், மைக்கை பறித்து வைத்துக்கொண்டும் தடை செய்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து லோகேஷ் பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவும் கடந்த சில நாட்களாக கோதாவரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். இதில், காக்கிநாடா அருகே உள்ள அனபர்த்தியில் சந்திரபாபு நாயுடுவின் பிரச்சாரத்திற்கு முதலில் போலீஸார் அனுமதி வழங்கினர்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சந்திரபாபு அனபர்த்திக்கு வந்தார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்தை தெலுங்கு தேசம் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், திடீரென பிரச்சாரத்திற்கு அனுமதி கிடையாது என கூறி, போலீஸார் சந்திரபாபு நாயுடுவின் வாகனம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சாலை மறியல் செய்ததை கண்டு தெலுங்கு தேசம் கட்சியினர் மட்டுமின்றி இதனை தொலைக்காட்சிகளில் பார்த்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். அப்போது தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சந்திரபாபு முன்னிலையிலேயே தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் மீதுபோலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடுவின் வாகனத்தை செல்ல விடாத காரணத்தால், அவர் 7 கி.மீ தூரம் வரை பொதுக்கூட்டத்திற்கு தனது தொண்டர்களுடன் நடந்தே சென்று நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘‘முதல்வர் ஜெகன் ஒரு சைக்கோ போல் நடந்து கொள்கிறார். சைக்கோ போக வேண்டும். சைக்கிள் (இவரது கட்சி சின்னம்) மீண்டும் வர வேண்டும்’’ என்று சந்திரபாபு கூறினார்.

நேற்று காலை காக்கிநாடா மருத்துவமனைக்கு சென்று, காயங்களுக்கு சிகிச்சை பெற்று வரும் தனது கட்சி தொண்டர்களை பார்த்து நலம் விசாரித்தார். கட்சி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு ஆறுதல் கூறினார். இதனிடையே, சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராமகிருஷ்ணா ரெட்டிஉட்பட 7 பேர் மீது அனபர்த்தி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், தர்ணா, சாலை மறியல்களில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்