புனே: "தேர்தல் ஆணையத்தின் முடிவினை ஏற்றுக்கொள்ளுங்கள். இதனால் பெரிய பாதிப்புகள் இருக்காது; புதிய சின்னத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என்று உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம், சிவசேனா கட்சியின் சின்னமான "வில் அம்பு" சின்னம் மற்றும் பெயரை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கியது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவினை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தவ் தாக்கரேவுக்கு, அவரது கூட்டணி கட்சித் தலைவர்களின் ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து சரத் பவார் கூறியதாவது:"இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. ஒரு முடிவு வழங்கப்பட்டவுடன் அது குறித்து விவாதம் நடத்த முடியாது. இந்த முடிவினையும், புதிய சின்னத்தினையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இழந்த பழைய சின்னத்தால் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது. மக்கள் புதிய சின்னத்தினை ஏற்றுக்கொள்வார்கள். இந்த விவாகரம் அடுத்த 15 -30 நாட்களுக்கு மட்டுமே மக்கள் மனதில் இருக்கும் விவாதிக்கப்படும்.
இந்திரா காந்தியும் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. முன்பு காங்கிரஸ் கட்சி நுகத்தடி பூட்டிய இரட்டைக் காளைகள் சின்னத்தை பயன்படுத்தி வந்தது. பின்னர் அந்த சின்னத்தை இழந்து, புதிய சின்னமாக தற்போதிருக்கும் கை சின்னத்தை பெற்றது,மக்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். அது போலவே மக்கள் சிவ சேனாவின்(உத்தவ் தாக்கரே அணி) இந்த புதிய சின்னத்தினை ஏற்றுக்கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தினை பயன்படுத்துவது தொர்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி, அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி ஆகிய இரண்டு அணிகளும் தேர்தல் ஆணையத்தினை அணுகி இருந்தன. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் பெயரையும், வில் அம்பு சின்னத்தினையும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவினை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி உச்ச நீதிமன்றத்தினை நாடப்போவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, " அவர்கள் முதலில் பாலா சாகேபை புரிந்து கொள்ளவேண்டும். மோடியின் முகத்தினை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் அவர்களின் சொந்த தேவைக்காக, அவர்களின் முகத்தில் பாலா சாகேப்பின் முகமூடியை மாட்ட முயற்சிக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை சின்னம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று நான் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்திருந்தேன். எம்பி, எம்எல்ஏகளின் அடிப்படையில் தான் ஒரு கட்சியின் இருப்பு அளவிடப்படும் என்றால், எந்த ஒரு முதலாளியும் எம்பி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி முதல்வராகலாம்.
எங்களுக்கு மக்களின் ஆதரவு உள்ளது நாங்கள் அவர்களிடம் செல்வோம். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவினை எதிர்த்து நிச்சயமாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்" இவ்வவாறு தாக்கரே தெரிவித்தார். உத்தவ் தாக்கரேயின் தந்தை பாலா சாகேப் தாக்கரே தான் சிவ சேனா கட்சியை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago