சிவசேனா உட்கட்சி பூசல் விவகாரத்தில் நபம் ரெபியா தீர்ப்பை மறுஆய்வு செய்வதா, வேண்டாமா? - உச்ச நீதிமன்றம் விரைவில் முடிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிவசேனா உட்கட்சி பூசல் வழக்கு விவகாரத்தில் நபம் ரெபியா தீர்ப்பை மறுஆய்வு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் முடிவை அறிவிக்க உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சுமார் இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அன்றைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இதைத் தொடர்ந்து கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவையின் அன்றைய துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே ஷிண்டே தரப்பில் துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, கடந்த 2022 ஜூன் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது.

ஆட்சி கவிழ்ந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தின் அன்றைய சபாநாயகர் நபம் ரெபியா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருந்தால் அந்த சபாநாயகர், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை முன்வைத்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வருகிறது. நபம் ரெபியா வழக்கு தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி முறையிட்டு வருகிறது.

இந்த சூழலில் சிவசேனா உட்கட்சி பூசல் வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நபம் ரெபியா வழக்கு தீர்ப்பினை 7 நீதிபதிகள் அமர்வு மூலம் மறுஆய்வு செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட வாதம் நடைபெற்றது. தீர்ப்பினை மறுஆய்வு செய்வது அவசியம் என்று உத்தவ் தாக்கரே தரப்பும், தீர்ப்பை மறுஆய்வு செய்ய தேவையில்லை என்று முதல்வர் ஷிண்டே தரப்பினரும் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்கள்நிறைவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் அடுத்த ஒரு வாரத்துக்குள் உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் என்று வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE