தேர்தலில் சூபிக்கள் மூலம் முஸ்லிம் வாக்குகளைப் பெற பாஜக திட்டம் - சிறுபான்மையினர் பிரிவு சார்பில் மாநாடு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கடந்த 2014-ல் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்தது முதல், முஸ்லிம் வாக்குகளை பற்றி பாஜக கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதற்கேற்ப மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இச்சூழலில், கடந்த ஆண்டு ஹைதராபாத் மற்றும் கடந்த மாதம் ஜனவரியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக அடித்தளம் அமைக்கும் வகையில் பிரதமர் மோடியும் பேசி இருந்தார்.

இந்நிலையில், பாஜக சிறுபான்மையினர் பிரிவு, முஸ்லிம்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக சூபிக்களின் ஆதரவைப் பெற பாஜக முயற்சிக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள தர்காக்களை வழிபடுபவர்களாக சூபிக்கள் உள்ளனர்.

இவர்களை, தர்காக்களை வழிபடும் முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் பெரிதும் மதிக்கின்றனர். இதனால், சூபிக்கள் மூலமாக முஸ்லிம்களின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, சூபிக்கள் மாநாட்டை வட மாநிலத்தில் நடத்தும் ஏற்பாடுகளில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு இறங்கியுள்ளது.

இதுகுறித்து பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசியத் தலைவர் ஜமால் சித்திக்கீ கூறும்போது, ‘‘பிரதமர் மோடியின் கொள்கையான, ‘அனைவருக்கும் அனைத்து திட்டங்கள், அனைவருடனும் அனைவருக்கான முயற்சி’ என்பது வெறும் கோஷம் அல்ல. அதுதான் பாஜகவின் திட்டம் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக, எங்கள் சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் முஸ்லிம் சூபிக்களுடன், கிறித்தவ பாதிரியார்களையும் அழைத்து ஒரு மாநாடு நடத்த உள்ளோம்’’ என்றார்.

டெல்லியின் நிஜாமுதீன் தர்கா மற்றும் ராஜஸ்தானின் காஜ மொய்னுதீன் சிஸ்தி தர்காவின் சூபிக்கள் மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE