“அரசியல் களத்துக்குள் ஆளுநர்கள் நுழையக் கூடாது” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசியல் களத்துக்குள் ஆளுநர்கள் நுழையக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்த விவகாரத்தில், அம்மாநில ஆளுநரின் செயல்பாடு ஒரு சார்பாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆளுநர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட சிவ சேனா, தேர்தலுக்குப் பின்னர் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சியை அமைத்ததாகக் குற்றம்சாட்டினார். இது சித்தாந்த ரீதியில் வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் விமர்சித்தார்.

அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ''ஆளுநர் தரப்பில் இத்தகைய வாதங்களை முன்வைப்பது எவ்வாறு சரியாக இருக்க முடியும்? சிவ சேனா வேறு கட்சிகளுடன் சேர்ந்து அரசமைக்க முன்வந்தால், அது ஆளுநரை எவ்வாறு பாதிக்கும்? ஆளுநரைப் பொறுத்தவரை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோர முடியும். அரசியல் களத்துக்குள் அவர் நுழையக் கூடாது'' என்று தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய துஷார் மேத்தா, தான் முன்வைத்த வாதங்கள் ஆளுநரின் வாதங்கள் அல்ல என்றும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் உள்ளுணர்வை பிரதிபலிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டவை என்றும் விளக்கம் அளித்தார். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரேவின் செயல், தனது கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் உள்ளுணர்வை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

இதற்கு உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சித்தாந்த அரசியல் குறித்தோ, யார் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் அல்லது கூட்டணி அமைக்கக் கூடாது என்பது குறித்தோ ஆளுநர் எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பிய அவர், துஷார் மேத்தாவின் வாதங்கள் ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE