ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டம், ராமர் பாலம் வழியாக செல்வதாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2007-ம் ஆண்டு சேது சமுத்திர திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ராமர் பாலத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அதிக காலம் எடுத்துக்கொண்டு வருவதால், தனது மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரித்து மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரி இருந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் பொதுநல மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்மா அடங்கிய அமர்வு இதனை தெரிவித்தது. எனினும், தற்போது அரசியல் சாசன அமர்வின் முன் வேறு சில மனுக்கள் இருப்பதால், அவை முடிந்ததும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE