பிபிசி நிறுவனத்தில் 3-வது நாளாக தொடரும் கணக்காய்வு - வருமான வரித்துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிபிசி செய்தி நிறுவனம் பரிமாற்ற விலை விதிகளை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டிய வருமான வரித்துறை, 3வது நாளாக தனது கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

3வது நாளாக தொடரும் ஆய்வு: டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை காலை 11.30 மணி அளவில் தங்கள் கணக்கு ஆய்வுப் பணிகளை தொடங்கினர். இந்த ஆய்வில், பரிமாற்ற விலை விதிகளை பிபிசி மீறி இருப்பது தெரிய வந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இரண்டு ஆவணப் படங்களை பிபிசி வெளியிட்ட நிலையில் இந்த கணக்கு ஆய்வு தொடங்கப்பட்டதால், இது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முறைகேடுகள் நடப்பதாகத் தெரிய வந்தால் அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமானதுதான் என்று கூறி, இந்த சோதனையை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நியாயப்படுத்தினார். இந்த சோதனை ஒரு நாளில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

ஆய்வில் என்ன நடக்கிறது?: இன்றைய சோதனையின்போது, சர்வதேச வரி விதிப்பு முறையைப் பயன்படுத்தி பிபிசி, இந்தியாவில் வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக அந்நிறுவனத்தின் குறிப்பிட்ட சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நிறுவனத்தின் நிதி விவகாரம், அது செயல்படும் விதம் ஆகியவை தொடர்பான டிஜிட்டல் மற்றும் காகித தரவுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆய்வு எப்போது முடியும்?: இந்த ஆய்வு எப்போது முடிவடையும் என்பது தொடர்பாக நேற்று பதிலளித்த வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த ஆய்வு மேலும் சில காலம் தொடரும் என்றும் ஆய்வை முடித்துக்கொள்வதற்கான காலத்தை களத்தில் உள்ள அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த சோதனை குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்த பிபிசி, வருமான வரித்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், சோதனை விரைவில் முடிவடையும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த ஆய்வு குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு கூறி இருந்தது.

பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக பிபிசி தயாரித்த ஆவணப்படங்கள் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்பட சமூக ஊடகங்களில் வெளியிட, பகிர இயலாதவாறு தடை செய்யப்பட்டன. ஆவணப்படத்தை முடக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE