கடனில் சிக்கிய ஏழை நாடுகளுக்கு உதவும் திட்டம் - பெங்களூருவில் நடைபெறும் ஜி20 கூட்டத்தில் இந்தியா வெளியிட வாய்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு உதவும் திட்டத்தை அடுத்த வாரம் நடைபெறும் ஜி20 கூட்டத்தில் இந்தியா முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய 20 பொரு ளாதார நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்த அமைப்பின் மிக முக்கிய கூட்டம் அடுத்த வாரம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் முன்வைப் பதற்கான ஒரு திட்ட வரைவை இந்தியா தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டம், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகளுக்கு வழங்கியுள்ள கடன் அளவை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும் என சீனா உள்ளிட்ட பணக்கார நாடுகளை வலியுறுத்தும்.

இதுபற்றி சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தெரியும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மத்திய அரசின் உயர் அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உலக வங்கி, இந்தியா, சீனா, சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ஜி7 அமைப்பின் பணக்கார நாடுகளின் பிரதிநிதிகளுடன் வரும் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் கலந்துரையாட இருப்பதாக சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. இதில், கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகளின் கடனை மறுசீரமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று முன்தினம் கூறும்போது, “வளரும் நாடுகளின் கடன் பிரச்சினையை சீனா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதற்குதீர்வு காணும் நிதி அமைப்புகளின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கப்படும்” என்றார்.

நமது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் ஆகியவை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. சர்வதேச நாடுகள் உடனடியாக தங்களுக்கு உதவ வேண்டும் என அந்த நாடுகள் கோரி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE