நாடு முழுவதும் 2 லட்சம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2 லட்சம் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: ''தற்போது நாடு முழுவதும் 63 ஆயிரம் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கூடுதலாக 2 லட்சம் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வேளாண்மையோடு, பால் வளம் மற்றும் மீன் வளம் ஆகியவையும் இணைக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களாக இவை இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண்மை் கடன் சங்கங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பஞ்சாயத்துகளில் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் இல்லையோ அங்கெல்லாம் இந்த சங்கங்கள் அமைக்கப்படும். கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தச் சங்கங்களின் மூலம் 25 வகையான பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்புடன் முழுமையான அரசு அமைப்பைப் போல் இந்த சங்கங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தச் சங்கங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து தரும். கணினி பயன்பாட்டுடன் சங்கத்தின் செயல்கள் இருக்கும். இந்தச் சங்கங்களில் இணையும் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பாடு அடைவது உறுதிப்படுத்தப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும் இது உதவிகரமாக இருக்கும்.

தற்போது உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை நவீனப்படுத்தவும், கணினி மூலம் அவற்றின் செயல்பாட்டை நவீனப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் ரூ. 2,516 கோடி நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.1,528 கோடியை மத்திய அரசு வழங்கும். இதற்கான ஒப்புதலை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கியது'' என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE