“அதானி விவகாரத்தில் மறைப்பதற்கும் அஞ்சுவதற்கும் பாஜகவிடம் ஏதுமில்லை” - அமித் ஷா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு மறைப்பதற்கும் ஒன்றுமில்லை; அஞ்சுவதற்கும் ஒன்றுமில்லை" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு உள்துறை அமித் ஷா அளித்த விரிவான பேட்டியில், காஷ்மீர் தேர்தல், நகரங்களில் முஸ்லிம் பெயர்கள் மாற்றம், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மீதான நடவடிக்கை எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பதிலளித்துள்ளார். குறிப்பாக அதானி விவகாரத்தில் தன் கருத்தை முன்வைத்துள்ளார்.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, சந்தை மதிப்பை இழந்துள்ள அதானி குழும நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்களின் முதலீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதன் காரணமாக நாடாளுமன்றம் வெகுவாக முடங்கியது.

இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, “அதானி குழும விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கைப் பற்றி விமர்சிப்பது சரியாகாது. ஆனால், அதானி குழும விவகாரத்தில் பாஜக அச்சப்படவும் ஏதுமில்லை; மறைக்கவும் ஏதுமில்லை” என்று கூறினார்.

முன்னதாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய அளவிற்கு சரிவினை சந்தித்துள்ளது. அந்த அறிக்கையின் உண்மை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தால், அதில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஹிண்டன்பர்க் - அதானி விவகாரத்தை கையாளும் திறன் செபிக்கு உள்ளது’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் அமைச்சர் அமித் ஷா, பாஜகவுக்கு இவ்விவகாரத்தில் அச்சமில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிஎஃப்ஐ தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, "பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அடிப்படைவாதத்தை, மத துவேசத்தை தூண்டியது. அவர்கள் தீவிரவாதத்திற்கான அடிப்படைத் தேவைகளை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மீதான நடவடிக்கையைத் தள்ளிப்போடுவது தேசத்தின் பாதுகாப்பில் சுணக்கம் காட்டுவதாகிவிடும். அதனால் தான் உள்துறை பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்தது" என்றார்.

மேலும், “வரலாற்றில் யாருடைய பங்களிப்பும் நீக்கப்படக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. சில நகரங்களில் பெயர்கள் மாற்றப்பட்ட முடிவு என்பது நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது. அவை அரசாங்கத்தின் உரிமைக்கு உட்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார். அதுகுறித்த விரிவான செய்தி > பெயர்களை மாற்றுவதால் முகலாய வரலாற்றை அழிக்கவில்லை - அமித் ஷா விளக்கம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE