பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிரடி சோதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அதற்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. விரைவில் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானவரித் துறை சோதனையை அடுத்து அலுவலக பணியாளர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், பிபிசி நிறுவனத்தின் இயக்குநர்களின் இல்லங்களில் இந்த சோதனை நடத்தப்படவில்லை.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக பிபிசி இரண்டு பகுதிகளைக் கொண்ட ஆவணப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, அந்த ஆவணப்படம் இந்தியாவில் வெளியாகாமல் தடுத்துவிட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.

மத்திய அரசின் நடவடிக்கையையும் மீறி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தப் பின்னணியில் பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE