அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - மாநிலங்களவை மார்ச் 13 வரை ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு, குடியரசுத்தலைவர் உரையுடன் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்செய்தார்.

பின்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ஹிண்டன்பர்க் - அதானி விவகாரத்தை ஆராய குழு அமைக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான நேற்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியது. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேச அனுமதித்தார்.

அவரது உரையில் குறிக்கிட்ட ஜகதீப் தன்கர், “எதிர்க்கட்சி தலை வரே நீங்கள் பலமுறை அவைத் தலைவர் பிறரின் அழுத்தத்தில் செயல்படுவதாக கூறியுள்ளீர்கள். அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” என்றார்.

தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப் பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு வந்த ராகவ் சத்தா, சஞ்சய் சிங், இம்ரான் பிரதாப்கர்ஹி உள்ளிட்டோரை அவைத்தலைவர் எச்சரித்தார். பிறகு அவையை மார்ச் 13 வரை ஒத்திவைத்தார். மக்களவையும் நேற்று மாலையில் மார்ச் 13 வரை ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்று நிறைவு பெற்றது. இரண்டாவது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வில், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பரிந்துரைகளுக்கு அவையின் ஒப்புதலை நிதியமைச்சர் கோருவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE