எதிர்க்கட்சியினரின் அமளிகளுக்கு மத்தியில் மார்ச் 13 வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ரஜனி பாட்டீல் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கினர். இந்நிலையில், மாநிலங்களவை மார்ச் 13-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு மாநிலங்களவைக் கூடியதும் வழக்கமான அலுவல் நடவடிக்கைகளுக்கான பணிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவையில் பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், கார்கேவை பேச அனுமதித்ததா. பின்னர் அவைத் தலைவர், "எதிர்க்கட்சித் தலைவரே, நீங்கள் பலமுறை அவைத் தலைவர் பிறரின் அழுத்தத்தில் செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளீர்கள். அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன" என்று தெரிவித்து கார்கேவின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பலர் அவைக்கு முன்பாகச் செல்ல முயன்றனர். இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 13-ம் தேதி வரை அவையை ஒத்திவைப்பதாகவும், விடுமுறை முடிந்து மார்ச் 13-ம் தேதி அவை மீண்டும் கூடும் என்றும் அவைத் தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக, அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் அமளியால் சிறிது நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், விதிகளுக்கு புறம்பாக அவை நடவடிக்கைகள் குறித்த வீடியோவை வெளியிட்டதற்காக, காங்கிரஸ் எம்.பி ரஜனி பாட்டீல், மீதமுள்ள பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராகவ் சத்தா, இம்ரான் பிரதாப்காரி, சக்தி சிங் ஹோலி, சந்தீப் பதக், குமார் கேட்கர் உள்ளட்டோர் அவைக்கு முன்பாக ஓடிவர முயன்றதற்காக அவைத் தலைவரால் எச்சரிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE