ஜம்மு - காஷ்மீர் எல்லை நிர்ணயத்திற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர்ரில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற எல்லைகளை வரையறுக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி ஆணையம் ஒன்றை அமைத்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பி தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இதன்படி ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 83-ல் இருந்து 90 ஆக உயர்ந்தது. இதில் 47 தொகுதிகள் காஷ்மீரிலும், 43 தொகுதிகள் ஜம்முவிலும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. புதிதாக உருவான 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காஷ்மீருக்கு ஒன்றும், ஜம்முவுக்கு 6-ம் கிடைத்தது. இரு பிராந்தியங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புவியியல் அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

இந்த புதிய எல்லை வரையறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை இன்று (திங்கள்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம், ஜம்மு - காஷ்மீரில் புதிய எல்லை வரையறை மூலம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE