இதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு...? - முன்னாள் நீதிபதி ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து மஹுவா மொய்த்ரா விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மஹுவா தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டு மாத காலத்திற்குள் மற்றொரு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாநில ஆளுநராக நிமிக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மையான அரசுக்கு யாரைப்பற்றியும் அக்கறை இல்லை. இதனை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா மைலார்ட்? " என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆந்திரா, ஜார்க்கண்ட் உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை நியமனம் செய்தார். இவர்களில் 6 பேர் புதிதாகவும், 7 ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஆந்திரப் பிரதேச ஆளுநராக கடந்த ஜன.4ம் தேதி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்று 40 நாட்களுக்குள் அப்துல் நசீருக்கு இந்த ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அயோத்தி - பாபர் மசூதி, முத்தலாக் தடை, பண மதிப்பிழப்பு, தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இவர் இடம்பெற்றிருந்தார்.

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் நீதிபதி இவர். ஆனால், மற்ற நீதிபதிகளுடன் இணைந்து ஒருமித்த தீர்ப்பை வழங்கினார்.

அப்துல் நசீர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை திரிணாமூல் எம்.பி. மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 2012ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேசிய "ஓய்வு பெறுவதற்கு முன்பு வழங்கப்படும் தீர்ப்புகள், ஓய்வுக்கு பின்னர் பெற இருக்கும் வேலைகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது" என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். அத்துடன், கடந்த 3-4 ஆண்டுகளாக இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசுகையில்," தற்போது நம்மிடையே இல்லாத உங்களுடைய (பாஜக) பெரிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல முறை, ஓய்வுக்கு பிறகு பெற இருக்கும் வேலை மீதான ஆசை, ஓய்வுக்கு முந்தைய தீர்ப்பை பாதிக்கிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும்" என்று கூறியிருந்தார்" என்று தெரிவித்தார்.

இவைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சட்டத்துறை அமைதச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஆளுநரை நியமித்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த சூழலும் அதன் முழு வேகத்துடன் இயங்க ஆரம்பித்துள்ளது. இனியாவது, இந்தியா குறிப்பிட்ட சிலரால் கட்டுப்படுத்தப்படுத்தப்படவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா தற்போது இந்திய அரசியலைப்பின் வழிகாட்டுதல் படி, இந்திய மக்களால் வழிநடத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE