பெங்களூரு: "புதிய இந்தியாவின் உயரத்திற்கு பெங்களூரு வானமே சாட்சி" என்று பிரதமர் மோடி பேசினார். பெங்களூருவில் "ஏரோ இந்தியா 2023" கண்காட்சியை இன்று (பிப்.13) அவர் தொடங்கி வைத்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா' சர்வதேச விமான கண்காட்சி திங்கள்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தகண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: "புதிய இந்தியாவின் திறமைக்கு பெங்களூருவின் இன்றைய வான்வெளி சாட்சியாகிக் கொண்டிருக்கிறது. புதிய உயரங்களே புதிய இந்தியாவின் முகம் என்பதற்கு இந்த வான்வெளி சாட்சியாகிக்கொண்டிருக்கிறது. தேசம் புதிய உயரங்களைத் தொட்டு அதனைக் கடந்தும் செல்கிறது.
பெருகிவரும் இந்தியாவின் திறமைக்கு "ஏரோ இந்தியா 2023" ஓர் உதாரணமாகும். இந்த கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்றிருப்பது உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து 700க்கும் அதிமான பங்கேற்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். இது கடந்த காலத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.
இந்த ஏரோ இந்தியா கண்காட்சி இந்தியாவின் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக இது வெறும் விமான கண்காட்சியாக மட்டுமே இருந்தது. இன்று இது வெறும் கண்காட்சி மட்டும் இல்லை. இது இந்தியாவின் பலம். இது இந்தியாவின் பாதுகாப்புத்துறை மற்றும் தன்னம்பிக்கையின் நோக்கங்களில் கவனம் செலுத்துகிறது." இவ்வாறு பிரதமர் பேசினார்.
மத்திய பாதுகாப்புத் துறை கடந்த 1996ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'ஏரோ இந்தியா' என்ற பெயரில் பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை நடத்தி வருகிறது. ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான இதில் பல்வேறு வெளிநாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்று வானில் சாகசங்களில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் 14-வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது. வருகிற 17ம் தேதி வரை 5 நாட்கள் இந்த கண்காட்சியில் இந்திய போர் விமானங்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த அதி நவீன போர் விமானங்களும் பங்கேற்கின்றன.
முதல் நாளான திங்கள்கிழமை நாட்டின் இலகு ரக தேஜாஸ் போர் விமானம், ஹெச்டிடி-40 போன்ற உள்நாட்டு விமானங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. இதுதவிர அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் எம். ஹெச். ஹெலிகாப்டர், 60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர், இஸ்ரேலின் ஏரோஸ் உள்ளிட்ட விமானங்களும் சாகசத்தில் ஈடுபடுகின்றன.
இந்த கண்காட்சியில் மொத்தமாக 811 அரங்குகள் இடம்பெறுகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் 701 இந்திய விமான நிறுவனங்களின் அரங்குகளும், 110 வெளிநாட்டு அரங்குகளும் இடம்பெறுகின்றன. உள்நாட்டு உபகரணங்கள், தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏரோ இந்தியா விமான கண்காட்சியை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கும் வட்டமேஜை மாநாடு இன்று (பிப்.13) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பெங்களூருவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல் மூன்று நாட்கள் வியாபாரிகளுக்காக நடக்கிறது. கடைசி இரண்டு நாளில் பொதுமக்கள் விமான கண்காட்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். காண்காட்சியை முன்னிட்டு, ஜன. 30 முதல் பிப். 20 வரை யலஹங்கா விமான நிலையத்தையெட்டி 10 கிமீ சுற்றளவிற்கு அனைத்து இறைச்சி, கோழி, மீன் கடைகளை திறக்கவும் அசைவ உணவகங்கள், ரெஸ்டாரண்ட்களின் அசைவ உணவு பரிமாறவும் விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்படுதிறது என்று பொதுமக்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், அசைவ உணவுவிடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை வெற்றிகரமாக 13 கண்காட்சிகள் நடந்தப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த கண்காட்சி 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago