பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு 35 டன் நிவாரண பொருட்களுடன் 7-வது ஜம்போ விமானம் அனுப்பிவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. அங்கு தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது. இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவும், துருக்கி மற்றும் சிரியாவுக்கு விமானப்படையின் சி-17 ஜம்போ விமானங்களில் இதுவரை 6 முறை நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. மேலும் இந்திய பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 7-வது முறையாக 35 டன் நிவாரண பொருட்கள்சி-17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் மாலை சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைந்தது. அங்கு 23 டன் நிவாரண பொருட்களை இறக்கியது. பின்னர் துருக்கியின் அதானா நகரில் உள்ள மருத்து வமனையில் மீதமுள்ள 12 டன் நிவாரணப் பொருட்களை இறக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இசிஜி இயந்திரம், பேஷன்ட் மானிட்டர், அனஸ்தீஸியா இயந்திரம், சிரிஞ் பம்ப்கள், குளுகோ மீட்டர், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட 99 பேர் அடங்கிய குழுவினர் துருக்கியின் இஸ்கென்ட்ரன் நகரில் தற்காலிக மருத்துவமனையை நிறுவி உள்ளனர்.

அங்கு அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்-ரே இயந்திரம், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இக்குழுவினர் இதுவரை நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE