போபால்: மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ‘அடுத்த முதல்வர் கமல்நாத்’ என்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது இருந்து காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் கமல்நாத்துக்கும் இடையில் பனிப்போர் உச்சகட்டம் அடைந்தது. கடந்த 2020 மார்ச் மாதம் சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏ.க்கள் காங்கிரஸில் இருந்து விலக கமல்நாத் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதன்பின், ம.பி.யில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதவியேற்றார். காங்கிரஸில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறிய சிந்தியா, பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், ம.பி. சட்டப்பேரவைப் பதவிக் காலம் 2024 ஜனவரி 6-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னதாக இந்த ஆண்டு நவம்பர் மாதம் ம.பி. தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ‘அடுத்த முதல்வர் கமல்நாத்’ என்ற கோஷத்தை அவரது ஆதரவாளர்கள் பரவலாக எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.
அதற்கேற்ப கமல்நாத்தும் ம.பி.யில் பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம்செய்து பிரச்சாரத்துக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில், ம.பி. காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் மாநில காங்கிரஸ் தலைவருமான அருண் யாதவ் கூறும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு எம்எல்ஏ.க்கள் சேர்ந்து ஒருமித்த கருத்துடன்தான் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வார்கள்’’ என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் திட்டவட்டமாக கூறினார். இதே கருத்தை ஆமோதித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அஜய் சிங் யாதவ் கூறும்போது, ‘‘எம்எல்ஏ.க்கள் சேர்ந்து முதல்வரை தேர்ந்தெடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் வழக்கம்.
எனவே, நான்தான் வருங்கால முதல்வர் என்று யாரும் தன்னைத் தானே சொல்லி கொள்ள முடியாது.என்னைப் பற்றி இப்போதைக்குசொல்ல வேண்டு மானால், அடுத்த எம்எல்ஏ.வாக நான் வரவேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்றார்.
இதுகுறித்து கமல்நாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘‘என்னை வருங்கால முதல்வர் என்று கட்சி தொண்டர்கள் எழுப்பும் கோஷங்களை என்னால் தடுக்க முடியாது. அப்படி கூறாதீர்கள் என்று யாரையும் நான் தடுக்க முடியாது. அதேவேளையில் எந்த பதவிக்கும் நான் அலையவில்லை’’ என்று மறுப்பு தெரிவித்தார்.
‘வருங்கால முதல்வர்’ (பவி முக்கியமந்திரி) என்ற சொல் காங்கிரஸார் மத்தியில் இந்த ஆண்டு தொடக்கத் திலேயே ஆரம்பித்து விட்டது. ‘வருங்கால முதல்வர் கமல்நாத்’ என்று அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் ம.பி.யின்பல இடங்களில் ஒட்டப்பட்டன. அதன்பின் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்கள் பத்திரிகையாளர்களிடம பேசுகையில், ‘வருங்காலமுதல்வர்’ என்ற சொல்லை பயன்படுத்தியே பேட்டிகள் அளித்தனர். சமீபத்தில் கடந்த வியாழக்கிழமை கூட காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டலில், ‘ம.பி.க்கு கமல்நாத் வேண்டும்’ என்று பதிவு வெளியானது. அதில், கமல்நாத் அரசு வந்து கொண்டிருக்கிறது’ என்று படத்துடன் தெரிவிக் கப்பட்டிருந்தது.
தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள்உள்ள நிலையில், கமல்நாத்தை மீண்டும் முதல்வராக சித்தரிக்கும் போக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மாநில கட்சிக்குள் கோஷ்டி பூசல் அதிகரிப்பதை உணர்ந்த ம.பி. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஜே.பி.அகர்வால், ‘வருங்கால முதல்வர்’ என்று சொல்வதற்கு 2 வாரங்களுக்கு முன்பே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தார். ‘‘முதல்வர் தேர்வுக்கென சில நடைமுறைகள் உள்ளன. அனைத்துக் கட்சிகளிலும் அப்படிதான் முதல்வர் தேர்வு நடைபெறுகிறது. அதில் காங்கிரஸ் கட்சி மட்டும் விதிவிலக்கல்ல’’ என்று கமல்நாத் ஆதரவாளர்களுக்கு பதில் அளித்திருந்தார்.
மேலும், காங்கிரஸில் இருந்து பாஜக.வுக்கு கட்சி மாறிய நரேந்திர சிங் சலூஜா தற்போது பாஜக செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். அவர் கூறும்போது, ‘‘எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை என்று கமல்நாத் கூறி வருகிறார்.
அதேநேரத்தில் ‘வருங்கால முதல்வர் கமல்நாத்’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் கட்சிஆதரவாளர்களை கோஷமிட வைக்கிறார். இந்த விஷயத்தில் அவருடைய உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுப்படுத்தவே இல்லை’’ என்றா்ா.
முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் உள்துறை அமைச்சர் நரோத்தம்மிஸ்ரா உட்பட பாஜக தலைவர்கள் பலரும், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும்கோஷ்டி பூசலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘‘ம.பி.யில் காங்கிரஸ் கட்சிதான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று எப்படி அனுமானத்தில் கூற முடியும்’’ என்று சவுகான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சவுகான் மேலும் கூறும்போது, ‘‘ம.பி.யில் அதிருப்தி தலைவர்களை ஒருங்கிணைக்க ‘கரங்கள் கோர்ப்போம்’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சிமுன்னெடுத்தது. இப்போது, கமல்நாத்தை கட்சியில் இருந்து ஒழிக்க பிரச்சாரம் நடக்கிறது. ‘நான்தான் முதல்வர்’ என்று கமல்நாத் தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ளார்’’ என்று விமர்சித்தார்.
கட்சிக்குள் எதிர்ப்புகள் இருந்தாலும், கமல்நாத்துக்கு ஆதரவும் உள்ளது.ம.பி. பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கூறும்போது, ‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலை, கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும்என்று கட்சி மேலிடம் முடிவெடுத்துவிட்டது’’ என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
ம.பி.யில் கோஷ்டி பூசல் மேலும் அதிகரித்தால் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago