டெல்லி டிஸ்காம்ஸ் தனியார் வாரியத்தில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினர்கள் நீக்கம்: துணைநிலை ஆளுநர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி தனியார் மின் பகிமான வாரியமான டிஸ்காம்ஸிற்கு அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாஸ்மின் ஷா மற்றும் அக்கட்சியின் எம்.பியான என்.டி.குப்தாவின் மகன் நவீன் குப்தா ஆகிய இருவரையும், அப்பதவியில் இருந்து நீக்கி டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, தனியார்களால் நிர்வகிக்கப்படும் வாரியங்களான டிஸ்காம்ஸ் - பிஓய்பிஎல், பிஆர்பிஎஸ் (அனில் அம்பானி) மற்றும் என்டிபிடிசிஎல் (டாடா) ஆகியவற்றில் அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பிரதிநிதிகளான ஜாஸ்மின் ஷா, ஆம் ஆத்மி எம்.பியான என்.டி.குப்தாவின் மகன் நவீன் குப்தா மற்றும் பிற தனியார் நபர்களை உடனடியாக நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் அரசு இந்த வாரியங்களின் பதவிகளில் இருந்தவரைக்கும், அரசு பொதுக் கருவூலத்தில் இருந்து அதானி நிர்வாகத்தில் இருக்கும் டிஸ்காம்ஸ் ரூ.8000 கோடிக்கு அதிகமாக பலன்பெற உதவியதன் மூலம் அகட்சியின் தவறான நடத்தை மற்றும் கையாடல் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 239ஏஏ கருத்து வேற்றுமையை தூண்டுதலின் படி, உடனடியாக டிஸ்காம்ஸ் வாரியத்தில் உள்ள அரசு நியமனப் பதவிகளில் உள்ளவர்களை நீக்கும்படி குடியரசுத் தலைவருக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரைத்திருந்தார். மேலும், அந்தப் பதவிகளுக்கு மூத்த அரசு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

தனியார் நிர்வகிக்கும் டிஸ்காம் வாரியத்தில் 49 சதவீத பங்குகளை வைத்துள்ள டெல்லி அரசு, அதன் பிரதிநிதிகளாக மூத்த அரசு அதிகாரிகளை பரிந்துரைக்கும். இதன்மூலம் டிஸ்காம் வாரியம் எடுக்கும் முடிவுகளில் டெல்லி அரசு மற்றும் டெல்லி மக்களின் நலன் பாதுகாக்கப்படும்.

ஏனெனில், டிஸ்காம்ஸ் வாரியத்திற்கு நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினர், கமிஷன் பெறும் ஏற்பாட்டின்படி, வாரியத்தின் முடிவுகளில் டெல்லி மக்கள் மற்றும் அரசின் நலன் சார்ந்து இயங்குதற்கு பதிலாக, பிஆர்பிஎல் மற்றும் பிஓய்பிஎல் வாரிய ஊழியர்களுடன் இணைந்து அவர்களுக்கு சாதமாக இயங்கினர். இதனால் வாரியத்தின் முடிவுகளில் எல்பிஎஸ்சி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன்மூலம் அவர்கள் ரூ.8468 கோடி வரை லாபம் அடைந்துள்ளனர். இந்த பணம் அரசின் கருவூலத்திற்கு வந்திருக்க வேண்டியவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் துணைநிலை ஆளுநருக்கும், அரவிந்த் கேஜ்ரிவால் அரசுக்கும் இடையில் நீண்ட காலம் மோதல் போக்கு இருந்து வருகிறது.

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறும்போது, "கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, துணைநிலை ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. காவல், நிலம் மற்றும் பொது ஆணை மட்டுமே துணைநிலை ஆளுநருக்கு கீழ் வரும். மற்ற அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிர்வகிக்கப்படும் என்று தெளிவாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால், துணைநிலை ஆளுநர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை அலட்சியம் செய்யும் விதமாக நடந்து வருகிறார்" என்று தெரிவித்திருந்தார்.

கடந்த மாதத்தில் துணைநிலை ஆளுநரும், டெல்லி முதல்வரும் ஒருமணி நேரத்திற்கு மேலாக சந்திப்பு நடத்தினர். அதன் பின்னர், டெல்லி முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பணிகளில் துணைநிலை ஆளுநரின் தலையீடு அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆளுநரை மாளிகை, "துணைநிலை ஆளுநர் மீது கேஜ்ரிவால் வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யான, தவறாக வழிநடத்தும், குறிப்பிட்ட உள்நோக்கம் கொண்டவை” என்று குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE