பயங்கரவாதி சயீது- வைதிக் சந்திப்பு: இந்திய துணைத் தூதரகத்திற்கு தெரியாது என சுஷ்மா விளக்கம்

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீதை இந்திய பத்திரிகையாளர் வேத் பிரதாப் வைதிக் சந்தித்தது பாகிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு தெரியாது என மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதி ஹபீஸ் சயீதை, பத்திரிகையாளர் பிரதாப் வேதிக் சந்தித்து பேசிய விவகாரம், கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் இருவரின் சந்திப்புக்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தால் இரண்டு நாட்கள் அவை நடவடிக்கைகள் முடங்கின.

இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும், இந்த விவகாரம் தொடர்பாக ராஷ்டீரிய ஜனதா தள மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் கூறும் விதமாக பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "பாகிஸ்தானில் உள்ள மும்பை தாக்குதலுக்கு காரணமானவராக கருதப்படும் பயங்கரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சயீதை, இந்திய பத்திரிகையாளர் வேத் பிரகாஷ் வைதிக் சந்தித்தது பாகிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு தெரியாது.

இது குறித்து அவர்களிடமிருந்து பெறக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை என்று மத்திய அரசிடன், பாகிஸ்தானில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக, அரசிடம் கேள்வி எழுப்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. இதனை ஏற்கனவே நாங்கள் கூறிவிட்டப் போதிலும், மீண்டும் ஒருமுறை தெளிப்படுத்துவதற்காக கூறுகிறேன். இருவரின் சந்திப்பு தொடர்பாக, மத்திய அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE