இந்திய வளர்ச்சி வேகத்தை பிரதிபலிக்கும் ‘வந்தே பாரத்’ ரயில்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவின் வளர்ச்சி வேகத்தையும் அளவையும் வந்தே பாரத் ரயில்கள் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேலும் 2 வந்தே பாரத் ரயில்களின் இயக்கம் இன்று துவக்கப்பட்டது. இதற்கான விழா மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி 2 வந்தே பாரத் ரயில்களையும் கொடி அசைத்து துவக்கிவைத்தார்.

ஒரு ரயில் மும்பையில் இருந்து சோலாப்பூர் வரையும், மற்றொரு ரயில் மும்பையில் இருந்து சாய்நகர் ஷீர்டி வரையும் இயக்கப்படுகிறது. மும்பையில் இருந்து சோலாப்பூருக்கு செல்ல தற்போதுள்ள அதிவிரைவு ரயில்கள் 7 மணி நேரம் 55 நிமிடங்களை எடுத்துக்கொள்வதாகவும், வந்தே பாரத் ரயில் இந்த தொலைவை 6 மணி 30 நிமிடங்களில் கடந்துவிடும் என்றும் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மிச்சமாகும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு வந்தே பாரத் ரயில்களையும் கொடி அசைத்து துவக்கிவைத்த பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''முதல்முறையாக ஒரே நேரத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் அலுவலகம் செல்வோர், விவசாயிகள், பக்தர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள். நவீன இந்தியாவை உருவகப்படுத்தக்கூடியதாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.

இந்த ரயில்கள் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வேகத்தை பிரதிபலிக்கக்கூடியவை. 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப இந்தியா தனது பொது போக்குவரத்தை மிக வேகமாக நவீனப்படுத்தி வருகிறது. இதன்மூலம், மக்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது. வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படுகிறது.

இந்த 2 ரயில்களோடு சேர்த்து இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 108 மாவட்டங்களை, 17 மாநிலங்களை இந்த ரயில்கள் இணைக்கின்றன. இதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை சந்திக்கும்போது, தங்கள் தொகுதியில் உள்ள மாநகரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை விடுப்பார்கள்.

ஆனால், தற்போது அவர்கள் தங்கள் தொகுதிக்கு வந்தே பாரத் ரயில் கேட்டு கோரிக்கை வைக்கிறார்கள். அந்த அளவுக்கு வந்தே பாரத் ரயில் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது'' என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE