மதுரை எய்ம்ஸ் விவகாரம்: திமுக, காங். தவறான தகவல்களைப் பரப்புவதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதிர்க்கட்சிகள் பிழையான தகவல்களைத் தந்து, அவையை தவறாக வழிநடத்துகின்றன" என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் ஆவேசமாக தெரிவித்தார்.

மக்களவையில் வெள்ளிக்கிழமை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த காரசாரமான விவாதமும், அதனைத் தொடர்ந்து வெளிநடப்பு காட்சிகளும் அரங்கேறின.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக நாடாளுன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, "எத்தனை மருத்துவக் கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன? பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது, “மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவில்லை” என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "மதுரை எய்ம்ஸில் மருத்துவப் படிப்புகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிழையான தகவல்களைக் கூறி அவையைத் தவறாக வழிநடத்துகின்றன.

சிலர் எல்லா விஷயங்களையும் அரசியல் ஆக்குகின்றனர். அவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நான் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், நோயாளிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளேன். அதற்கான எதிர்வினைதான் இது. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை மோடி அரசு அனுமதிக்காது. இதுபோன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக நாங்கள் எங்களது நடவடிக்கைகளைத் தொடர்வோம்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் பேசும்போது திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மத்திய அமைச்சருக்கு ஆதராவாக சில பாஜக எம்பிகளும் குரல் எழுப்பினர்.

இந்த நிலையில், திமுக எம்.பி தயாநிதி மாறன், "இப்படி பேசுவதற்கு இவர் யார்? அவர் எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்" என்று ஆவேசமாக கூறினார்.

சிறிது நேரம் தொடர்ந்த இந்த அமளிக்களுக்கு பின், எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர் கூறிய வார்த்தைகள் சரியா, தவறா என்று தான் ஆய்வு செய்வதாக தெரிவித்தார். இதில் திருப்தி அடையாத காங்கிரஸ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

முன்னதாக, “பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டில் மருத்துவப் படிப்புகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால், மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க வேண்டிய தேவை இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது அவை 657 ஆக அதிகரித்துள்ளது.

மாநில அரசு அல்லது தனியார் அமைப்புகள் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 37 மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் 89 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

பின்புலம் என்ன? - தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதற்கு இடம் தேர்வு செய்வதில் தொடங்கி, தற்போது மருத்துவமனை கட்டும் பணி தொடங்குவது வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. அதிமுக ஆட்சியில் இந்த மருத்துவமனையை தஞ்சாவூருக்கு கொண்டு செல்ல முயன்றார்கள். ஆனால், மத்திய அரசு, மதிப் பெண்கள் அடிப்படையில் மதுரையை தேர்வு செய்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி, ஒற்றை செங்கலைக் காண்பித்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி இதுவரை தொடங்கவில்லை என்று கிண்டலடித்தார்.

மேலும் திமுக ஆட்சி அமைந்ததும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்படும் என்றார். இருப்பினும், தற்போது வரை அதற்கான பணி தொடங்கவில்லை. ஒரே ஆறுதலாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி திமுக - பாஜக அரசியல் மோதலால் தாமதமாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) காட்டும் ஆர்வம்கூட திமுகவுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், மதுரை மாநகர் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சமீபத்தில் போராட்டத்தை நடத்தியது. ஜப்பான் நிதி வருவது தாமதமாகும் நிலையில் மத்திய அரசு தன் பங்கீடான ரூ.400 கோடியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE