புதுடெல்லி: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக மீது சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரைகள் மலரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி மாநிலங்களவையில் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: மாநிலங்களவை என்பது தரமான, ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் அவையாகும். ஆனால், சில எம்.பி.க்களின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது. இதனால், ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைகிறது.
பாஜக மீது நீங்கள் சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரைகள் மலர்ந்து கொண்டே இருக்கும். தாமரை மலர்வதற்கு நீங்கள் (எதிர்க்கட்சிகள்) அளிக்கும் மறைமுக ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி.
கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் அமைத்ததாகவும், அதன் பலனை இப்போது நாங்கள் அறுவடை செய்வதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
» தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களில் உ.பி முதலிடம்: மத்திய அரசு பதிலில் தகவல்
» தமிழகத்தில் 10, நாடு முழுவதும் 111 நீர்வழிப் பாதைகள்: மத்திய அரசு தகவல்
2014-ல் நான் பிரதமராகப் பதவியேற்றேன். எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், காங்கிரஸ் ஆட்சியில் 60 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும். காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.
2014-க்கு முன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வங்கிக் கணக்கு கிடையாது. பாஜக ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் 48 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. பாஜக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 25 கோடி குடும்பங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
2014-ம் ஆண்டுக்கு முந்தைய பட்ஜெட்டைவிட, தற்போது கல்வி, உட்கட்டமைப்புகளுக்கு 5 மடங்கு அதிக நிதி ஒதுக்கப் படுகிறது.
லஞ்சம், ஊழல் இல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசு நலத் திட்டங்கள் சென்றடைவதே உண்மையான மதச்சார்பின்மை. அந்த வகையில், நாங்கள் உண்மையான மதச்சார்பின்மையைப் பின்பற்றி வருகிறோம்.
அண்டை நாடுகள் தவறானப் பொருளாதாரப் பாதையை தேர்ந்தெடுத்ததால், கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் சில மாநில அரசுகள் உடனடிப் பலன்களுக்காக அதிக கடன் வாங்கி வருகின்றன. இது மாநிலத்தை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும். எனவே, மாநில அரசுகள் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட வேண்டுகிறேன்.
காங்கிரஸ் ஆட்சியில் 600-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நேரு மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் சூட்டப்பட்டன. ஆனால், நேருவின் வாரிசுகள் அவரது பெயரை தங்கள் பெயரோடு சேர்க்கவில்லை. நமது நாடு ஒரு குடும்பத்தின் (நேரு) சொத்து கிடையாது. இது மக்களின் சொத்து.
மக்கள் தொடர்ந்து புறக்கணித்த போதும் காங்கிரஸ் மாறவில்லை. தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களது நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கண்காணித்து, தக்க தண்டனை வழங்கி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. 356-வது பிரிவைப் பயன்படுத்தி, பல்வேறு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 50 முறை 356-வது பிரிவைப் பயன்படுத் தினார்.
அவையில் இருக்கும் திமுக நண்பர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியைக் கலைத்தது யார்? அப்போதைய காங்கிரஸ் அரசு என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள். எம்ஜிஆர் ஆட்சியையும் காங்கிரஸ் அரசே கலைத்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.
அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அனைத்து மாநிலங்களின் ஆளுநர் மாளிகைகள் காங்கிரஸ் அலுவலங்களாகச் செயல்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago